உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியின் சாலையோரங்களில் ஓங்கி வளர்ந்துள்ள... அபாய மரங்களால் ஆபத்து!

ஊட்டியின் சாலையோரங்களில் ஓங்கி வளர்ந்துள்ள... அபாய மரங்களால் ஆபத்து!

ஊட்டி:ஊட்டியில் சூறாவளி காற்றுக்கு அடுத்தடுத்து விழுந்து வரும் மரங்களால், உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கி கடந்த ஒரு வாரமாக பல பகுதிகளில் கன மழை பெய்தது. இரு நாட்களாக மழை ஓரளவு ஓய்ந்ததும், அவ்வப்போது பலத்த காற்று வீசி வருகிறது.நேற்று முன்தினம் முதல் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்தது. இரவு முழுவதும் சூறாவளி காற்று சுழற்றி அடித்தது. குறிப்பாக, குந்தா, ஊட்டி வட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்தது. நேற்று காலையில் பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரும்பாலான இடங்களில் மின் தடை ஏற்பட்டது.சம்பவ பகுதிக்கு, நெடுஞ்சாலை, தீயணைப்பு, மின்வாரிய ஊழியர்கள் வந்து, பெரும் சிரமத்திற்கு இடையே பவர்ஷா மூலம் ஒவ்வொரு பகுதியாக மரங்களை அறுத்து, பொக்லைன் உதவியுடன் அப்புறப்படுத்தினர். காலை, 10:30 மணிக்கு போக்குவரத்து சீரானது. வேலைக்கு செல்பவர்கள், கல்லுாரி மாணவர்கள் காந்திபேட்டையிலிருந்து ஊட்டி நகர் வரை நடந்து வந்தனர். கடும் குளிரால், பெண்கள், வயதானவர்கள் பாதிக்கப்பட்டனர்.

உடனடி ஆய்வு அவசியம்

மாவட்ட முழுவதும் அன்னிய மரங்களான கற்பூரம் மரங்கள் நுாறாண்டை கடந்து அபாயகரமான நிலையில் உள்ளது.பருவமழை சமயத்தில் பலத்த காற்று, கன மழைக்கு ஆங்காங்கே விழுந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. சில நேரங்களில் உயிர் பலி சம்பவங்களும் நடந்துள்ளது.தற்போது, ஊட்டி சுற்றுப்புற பகுதியில் வீசிய பலத்த காற்றுக்கு ஏராளமான மரங்கள் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. நகரின் சாலையோரங்களில் அபாயகரமான நிலையில் உள்ள கற்பூர மரங்களை ஆய்வு செய்து அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று நடந்த பாதிப்பதால் உள்ளூர் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் ஹரிராமகிருஷ்ணன் கூறியதாவது:ஊட்டி, குன்னுார், கோத்தகிரி மற்றும் கூடலுார் ஆகிய நான்கு தாலுகாவில் தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவில் வீசிய காற்றில் பல மரங்கள் விழுந்தன.நேற்று அதிகாலை, 5:00 மணி முதல் தீயணைப்பு துறை நிலைய அலுவலகங்களில் போன் கால் அழைப்பு வர துவங்கியது. அதன்படி, மாவட்டத்தில், 30 போன்கால் வந்தன. 50 மரங்கள் விழுந்தது. தீயணைப்பு துறையினருடன் நெடுஞ்சாலை, மாநில பேரிடர் மீட்பு குழு, மின் ஊழியர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து மரங்களை அகற்றினோம். அடுத்தடுத்து மரங்கள் விழுந்ததால் ஒவ்வொரு பகுதியாக அகற்றி செல்ல திணறும் நிலை ஏற்பட்டது. அபாய மரங்களை வெட்ட உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ