மார்க்கெட் கடைகளை இடித்து கட்ட முடிவு; தற்காலிக கடைகள் அமைக்கும் பணி தீவிரம்
குன்னுார்; குன்னுார் மார்க்கெட் கடைகள் விரைவில் இடித்து கட்டப்பட உள்ளதால், உழவர் சந்தை அருகே தற்காலிக கடைகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.குன்னுார் நகராட்சி மார்க்கெட்டில், 800க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்குள்ள கடைகளை இடித்து, 41.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பார்க்கிங் வசதியுடன், 678 கடைகள் கட்டும் பணிகள் மேற்கொள்ள, திட்டமிடப்பட்டு உள்ளது. கடை வியாபாரிகளுக்கு தற்காலிக மாற்று கடைகள் வைக்க நகராட்சி சார்பில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.அதில், உழவர் சந்தை அருகே, 2 ஆண்டுகளுக்கு முன்பு, 82.99 லட்சம் ரூபாய் செலவில் அமைத்த நுண்ணுயிர் மையத்தில், தற்காலிக இறைச்சி கடைகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதன் சுற்றியும் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நகராட்சி பழைய வாகனங்கள் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு, நிலம் சமன்படுத்தப்பட்டுள்ளது.நகராட்சி கமிஷனர் இளம்பரிதி கூறுகையில், ''உழவர் சந்தை அருகே உள்ள இடத்தில், 250 கடைகள் வரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றதும், மார்க்கெட் கடைகளை அந்த பகுதிக்கு விரைவில் மாற்ற, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது,'' என்றார்.