உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பசுந்தேயிலை வினியோகத்தை நிறுத்த முடிவு

பசுந்தேயிலை வினியோகத்தை நிறுத்த முடிவு

குன்னுார்; குந்தா மேற்குநாடு கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு, 9ம் தேதியில் இருந்து பசுந்தேயிலை வினியோகம் நிறுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை துாள் ஏலம் விடப்படுவதன் அடிப்படையில், தேயிலை வாரியம் மற்றும் மாவட்ட விலை நிர்ணய குழுவினர் பசுந்தேயிலைக்கான விலையை நிர்ணயம் செய்கின்றனர்.குறிப்பாக, குன்னுார் 'இன்கோசர்வ்' கீழ் உள்ள, 16 தேயிலை கூட்டுறவு தொழிற்சாலை அங்கத்தினர்களுக்கு இதன் அடிப்படையில், பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.இந்நிலையில், குந்தா தாலுக்காவுக்கு உட்பட்ட மேற்குநாடு, மஞ்சூர், கிண்ணக்கொரை, பிக்கட்டி, இத்தலார், நஞ்சநாடு மற்றும் மகாலிங்கா உள்ளிட்ட, 8 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு அக்., மாத விலை வழங்கியதில் பாரபட்சம் காட்டியதாக அங்கத்தினர்கள் குற்றம் சாட்டினர்.

வினியோகம் நிறுத்த முடிவு

குந்தா மேற்குநாடு சிறு தேயிலை விவசாயிகளின் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் கூறியதாவது: குந்தா பகுதிகளில் உள்ள, 8 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வழங்கப்படுகிறது. தேயிலை தொழிலை நம்பி, 15 ஆயிரம் தேயிலை விவசாயிகள், 20, ஆயிரம் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உள்ளது. கடந்த அக்., மாத பசுந்தேயிலை விலையில் பாரபட்சம் காட்டி, 4 முதல் 7 ரூபாய் வரை குறைவாக வழங்கப்பட்டதால், தொழில்துறை அமைச்சர், தொழில் ஆணையரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.ஒருவாரத்திற்குள் பரிசீலித்து, அக். மாதம் வழங்காத நிலுவை தொகையை உடனடியாக வழங்க, இன்கோசர்வ் அதிகாரிகளுக்கு, அமைச்சரும், ஆணையரும் பரிந்துரைத்தனர்.ஆனால், இந்த பரிந்துரையினை கடந்த ஒரு மாத அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. இது தொடர்பாக, 8 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையின் அங்கத்தினர்களின் பிரிதிநிதிகள் கூட்டம் நடத்தி முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.வரும், 6ம் தேதிக்குள், அக்., மாதத்திற்கான மாவட்ட விலை நிர்ணய குழு நிர்ணயித்த விலையை வழங்கவில்லை எனில், 9ம் தேதியில் இருந்து, கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வினியோகம் செய்வதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை