ஏப்.,1ல் இருந்து அரசு ஒப்பந்த பணிகளை நிறுத்த முடிவு: கிரஷரில் சிண்டிகேட் அமைத்து விலையேற்றுவதாக குற்றச்சாட்டு
குன்னுார்: நீலகிரிக்கு கொண்டு வரும் ஜல்லி உள்ளிட்டவைகளுக்கு ஏற்பட்ட திடீர் விலை உயர்வை கண்டித்து, வரும் ஏப்., 1ல், அரசு ஒப்பந்த பணிகள் நிறுத்த ஒப்பந்ததாரர்கள் முடிவு செய்துள்ளனர்.கட்டுமான பணிகளுக்கு மணலுக்கு பதில், தற்போது ஜல்லி, எம். சாண்ட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீலகிரிக்கு, மேட்டுப்பாளையத்தில் இருந்து கொண்டுவரப்படும் இவற்றின் விலை, திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக, நீலகிரி மாவட்ட கட்டுமான தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், குன்னுாரில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் செல்வம் தலைமை வகித்தார்.பொறியாளர் சங்க செயலாளர் மாதேஷ் பேசுகையில், ''தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் இங்கு மட்டும் கிரஷர் தூள் விலை திடீரென பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து ஒப்பத்த பணி, கட்டுமான பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது; தீர்வு காண கோரியும் பலன் இல்லை. எனவே வரும் ஏப்., 1ல் இருந்து, உள்ளாட்சி உள்ளிட்ட அனைத்து ஒப்பந்த பணிகள் நிறுத்தப்படும்,'' என்றார்.லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஈஸ்வரன் பேசுகையில், ''மேட்டுப்பாளையம் உட்பட கொங்கு மண்டலத்தில் உள்ள கிரஷர் உரிமையாளர்கள், சிண்டிகேட் அமைத்து, செயற்கையான விலை ஏற்றம் செய்துள்ளனர். இதனால், அங்கு கட்டுமான பொருட்கள் யாரும் வாங்க கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை, நகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கங்கள், நீலகிரி மாவட்ட பொறியாளர் சங்கம், மிலிட்டரி இன்ஜினியரிங் சர்வீஸ், நீலகிரி மாவட்ட லாரி உரிமையாளர் சங்கம், கட்டுமான தொழிலாளர் சங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஒப்பந்ததாரர்கள் சங்கம் மட்டுமின்றி, அனைத்து கட்டுமான சங்கங்களின் ஆதரவுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானங்கள் தமிழக முதல்வர், அமைச்சர், கலெக்டர் உட்பட அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்படும்,'' என்றார். அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.