உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தொடரும் மழையால் இலை வரத்து அதிகரித்தும் போதிய விலை இல்லை! கவலையில் கூட்டுறவு தொழிற்சாலை அங்கத்தினர்கள்

தொடரும் மழையால் இலை வரத்து அதிகரித்தும் போதிய விலை இல்லை! கவலையில் கூட்டுறவு தொழிற்சாலை அங்கத்தினர்கள்

ஊட்டி; நீலகிரி மாவட்ட கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் இலை கொள்முதல் அதிகரிப்பால் தேயிலை துாள் உற்பத்தி விறு, விறுப்பாக நடந்து வருகிறது; பசுந்தேயிலைக்கு போதிய விலை இல்லாததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். குன்னுார் 'இன்கோசர்வ' (கூட்டுறவு இணையம்) கட்டுப்பாட்டில், 'கிண்ணக்கொரை, பிக்கட்டி, பிதர்காடு, கரும்பாலம், எப்பநாடு, கைக்காட்டி, மகாலிங்கா, மஞ்சூர், மேற்குநாடு, பந்தலூர், நஞ்சநாடு, பாண்டியார், கட்டபெட்டு, சாலிஸ்பரி, பிராண்யர், குந்தா, இத்தலார்,' உள்ளிட்ட, 17 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில், 30 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருந்து கொண்டு தங்களது தேயிலை தோட்டத்தில் அறுவடை செய்யும் பசுந்தேயிலையை வினியோகித்து வருகின்றனர். வரத்து அதிகரிப்பு நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை மே மாதம் இறுதியில் துவங்கி கடந்த இரண்டு மாதங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது வெயில் தென்பட்டு நல்ல சீதோஷ்ண நிலை நிலவியதால் தேயிலை வரத்து படிப்படியாக அதிகரித்தது. தற்போது, பெரும்பாலான கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் தினசரி, 20 ஆயிரம் கிலோ முதல் , 25 ஆயிரம் கிலோ வரை பசுந்தேயிலை கொள்முதல் அதிகரித்துள்ளது. மூன்று 'ஷிப்ட்' அடிப்படையில் தேயிலை துாள் உற்பத்தியும் நடந்து வருகிறது. கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் அந்தந்த தொழிற்சாலைகளின் விற்பனையை பொறுத்து பசுந்தேயிலைக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி , கிலோவுக்கு, 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக இலை வரத்து அதிகரிக்கும் போது, பசுந்தேயிலைக்கான விலை குறைய வாய்ப்புள்ளது. வரத்து அதிகரித்ததால், மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் விலையில் முன்னேற்றம் இல்லாததால், பராமரிப்பு செலவுகளை ஈடு செய்ய முடியாமல் கவலை அடைந்துள்ளனர். இழுத்தடிப்பதால் சிக்கல் இங்குள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் பல லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தொழிற்சாலைகளில் புனரமைப்பு பணிகள் நடந்தது. ஒரு சில தொழிற்சாலைகளை தவிர, பெரும்பாலான கூட்டுறவு தொழிற்சாலைகள் நஷ்டத்தில் இயங்குவதால் தொழிற்சாலை நிர்வாகம் சிக்கலில் திணறி வருகிறது. உறுப்பினர்கள் வினியோகிக்கும் இலைக்கு முன்பணம் மட்டும் வழங்கப்படுகிறது. 'செட்டில்மென்ட்' தொகை மாத கணக்கில் இழுத்தடிக்கப்படுவதால், இலை வினியோகித்த உறுப்பினர்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். இதற்கு தீர்வு காண உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த அரசும் கண்டுகொள்ளவில்லை தொழிற்சாலை உறுப்பினர்கள் கூறுகையில்,'இலை வரத்து அதிகரிப்பது மகிழ்ச்சி அளித்தாலும், விலை குறைவதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு தொழிற்சாலைகளை தாய் வீடாக கருதி இலை முழுவதையும் வினியோகித்து வருகிறோம். சரிவர பணம் தராததால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளோம். சிறு விவசாயிகளின் பிரச்னைக்கு எந்த அரசும் செவி சாய்க்காததால் தேயிலை தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது,'என்றனர்.

உர தேவைக்கு அணுகலாம்

கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் முத்துக்குமார் கூறுகையில்,''பரவலாக பெய்து வரும் மழைக்கு நல்ல சீதோஷ்ண நிலை நிலவுவதால், சிறு விவசாயிகள் தேயிலை தோட்டங்களை பராமரிக்க ஆயத்தமாகுவது வழக்கம். விவசாயிகளின் நலன் கருதி மாவட்டத்திலுள்ள என்.சி.எம்.எஸ்., கூட்டுறவு நிறுவனங்களில் விவசாயிகளுக்கு தேவைக்கேற்ப உரம் வினியோகிக்க தேவையான அளவு இருப்பில் உள்ளது.அந்தந்த கூட்டுறவு நிறுவனத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை