வளர்ச்சி பணிகள் ஆய்வு
கோத்தகிரி; கோத்தகிரி நகராட்சியில், 42.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா ஆய்வு செய்தார்.கோத்தகிரி நகராட்சி பகுதிகளில் மொத்தம், 21 வார்டுகளில், 105 குக்கிராமங்கள் உள்ளன. அதில், கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட ஈளாடா தடுப்பணையில் இருந்து, கோத்தகிரி நகர பகுதிகளில் உள்ள ஒன்பது வார்டுகளுக்கு, குடிநீர் வழங்கப்படுகிறது. அதில், அம்ருத், 2.0 திட்டத்தின் கீழ், 42.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் வினியோக முறை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் ஆய்வு செய்து, மக்கள் பயன்பாட்டிற்காக பணியை விரைந்து முடிக்கவும், எஸ்.ஏ.டி.பி., திட்டத்தில், 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், வண்டிப்பேட்டை துாய்மையாளர் குடியிருப்பு இடையே, நடைபாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.ஆய்வின்போது, குன்னுார் சப்-கலெக்டர் சங்கீதா, கோத்தகிரி நகராட்சி கமிஷனர் மோகன்குமார் மற்றும் தாசில்தார் ராஜலட்சுமி உட்பட பலர் உடனிருந்தனர்.