குழியாக மாறும் மாநில நெடுஞ்சாலை: வாகனங்கள் செல்வதில் சிரமம்
பந்தலுார்: கூடலுாரில் இருந்து தமிழக மற்றும் கேரளா மாநிலத்திற்கு செல்லும், நெடுஞ்சாலை குழிகளாக மாறி வருவதால் வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர். ஊட்டி மற்றும் கூடலுாரில் இருந்து, கேரளா மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக பகுதிக்கு செல்லும் வாகனங்கள், பந்தலுார்- தேவாலா சாலை வழியாக செல்கின்றன. இந்த சாலையின் பல இடங்களில், குழிகள் ஏற்பட்டும், சாலை ஓரங்களில் மண்ணரிப்பு ஏற்பட்டு மண் மூட்டைகளை தற்காலிகமாக அடுக்கி வைத்தும், மூன்று மாநில வாகனங்கள் சென்று வருகிறது. சாலையில் உருவாகி வரும் குழிகளால், சிறிய வாகனங்கள் செல்லும்போது அடியில் உராய்வு ஏற்பட்டும், கனரக வாகனங்கள் செல்லும் போது பழுதடைந்தும் வாகன ஓட்டுனர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பகல் நேரங்களில் சாலை நிலை குறித்து தெரிந்து மெதுவாக இயக்கினாலும், இரவு நேரங்களில் சாலை நிலை குறித்து தெரியாமல் வேகமாக வரும் வாகனங்கள் நிலை தடுமாறி, விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே, கூடலுார் முதல் பந்தலுார் வரையிலான நெடுஞ்சாலை பகுதியை சீரமைக்க நெடுஞ்சாலை துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.