தினமலர் - பட்டம் மெகா வினாடி -- வினா போட்டி : அசத்திய ஹோலி கிராஸ் பள்ளி மாணவர்கள்
கூடலுார்: 'தினமலர்' நாளிதழின் மாணவர் 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த, 'பதில் சொல்; பரிசை வெல்' வினாடி -வினா போட்டியில், கூடலுார் தேவர்சோலை ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், உடனுக்குடன் பதில்களை கூறி பரிசுகளை வென்றனர். கற்றல் ஆர்வத்தையும், நுண்ணறிவு திறனையும், வாசிப்பு ஆர்வத்தையும் ஊக்குவித்து படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவு படுத்துவதற்காக, 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில், வினாடி-வினா போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் வினாடி- வினா 2025--26 போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதில், பள்ளி அளவில் மாணவர்களுக்கு இடையே நடைபெறும் வினாடி - வினா, போட்டியில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, பள்ளி அளவில் இறுதி போட்டி நடத்தப்படுகிறது. போட்டியின் நிறைவாக பரிசுகள் வழங்கப் படுகிறது. நடப்பு ஆண்டு 'தினமலர்' நாளிதழில் பட்டம் இதழ் மற்றும் எஸ்.என்.எஸ்., கல்வி குழுமம் இணைந்து நடத்தும் வினாடி- - வினா போட்டியில், 'சத்யா' ஏஜென்சி மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' கரம் கோர்த்து இணைந்துள்ளன. இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றன. பள்ளி அளவில் நடைபெறும் போட்டியில் முதல் இடம் பிடிக்கும் மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அவர்களிலிருந்து தேர்வாகும் எட்டு அணிகள் இறுதி போட்டியில் பங்கேற்க உள்ளன. இறுதி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும். இதன்படி, நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலை ஹோலி கிராஸ் மேல்நிலைப் பள்ளிகள் நடந்த வினாடி-வினா போட்டியில் தகுதி சுற்றுக்கான பொது அறிவு தேர்வை, 40 பேர் எழுதினர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில் மாணவிகள், பாத்திமாரிபா, தியானா பாத்திமா ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர். அவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியை நிஷா பாப்பச்சன் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து பள்ளி அளவில் இறுதிப் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில், பள்ளியின் பட்டம் பொறுப்பாசிரியர்கள் மோகன், சுமித்ரா உடன் இருந்தனர்.
படித்து பாதுகாக்க வேண்டும்
பள்ளியின் பட்டம் பொறுப்பாசிரியர், மோகன்: ' தினமலர்' பட்டம் இதழ் மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது. இதில் வரும் தகவல்கள், பயனுள்ளதாகவும், படித்து பாதுகாக்க வேண்டிய வகையில் அமைந்து இருப்பது சிறப்பு; எங்கள் பள்ளி மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பள்ளி நிர்வாகமே பட்டம் இதழை வரவழைத்து மாணவர்களுக்கு வழங்கி, மாணவர்களை ஊக்கப்படுத்தி வருவதே இதற்கு சான்றாகும். மாணவி பாத்திமா ரிபா: ' தினமலர்' பட்டம் இதழை தொடர்ந்து படிப்பதற்கு, எங்கள் பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியரும் ஊக்கப் படுத்தி வருகின்றனர். இதனை படிப்பதன் மூலம் பொது அறிவு வளர்வதுடன், அரசு போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. அதில், வரும் பல்வேறு தகவல்கள், படித்து பாதுகாக்கும் வகையில் உள்ளது. பட்டம் இதழில் வரும் தகவல்களும், இது தொடர்பாக நடந்த வினாடி - வினா போட்டிகள் எதிர்காலத்தில் அரசு போட்டி தேர்வுகளை எதிர் கொள்ள படிக்கற்களாக உள்ளது. மாணவி தியானா பாத்திமா: பட்டம் இதழ், மாணவர்களுக்கு தேவையான பொதுஅறிவு, கணக்கு, அறிவியல் தொடர்பான தகவல்களை எளிதாக வழங்கி வருகிறது. தினமும் பட்டம் இதழை வாசிப்பதன் மூலம், பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. இதனை தொடர்ந்து படிப்பது, எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். பட்டம் வினாடி-வினா போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றது, சாதிக்கும் எண்ணத்தை அதிகரித் துள்ளது.
பொது அறிவு வளரும்
பள்ளி தலைமை ஆசிரியை சகோ. நிஷா பாப்பச்சன்: மாணவர்களுக்காக, வெளிவரும் 'தினமலர்' 'பட்டம்' இதழ், மாணவர்களின் வாசிப்புத் திறனை அதிகரிக்கும். பொது அறிவு. அறிவியல் சார்ந்த தகவல்கள் மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும். பட்டம் சார்பில் நடத்தப்படும் வினாடி - வினா போட்டியால் மாணவர்களின் திறமை வெளிப்படுத்தி, போட்டி தேர்வுகளுக்கு வழிகாட்டியாக உள்ளது. பட்டம் இதழ் சார்பில் போட்டி தேர்வுகளையும் நடத்தலாம். மாணவர்களுக்கான 'தினமலர்' சமூக பணிகள் தொடர வாழ்த்துக்கள்.