குறைந்த ஊழியர்களை கொண்டு நெல் அறுவடை; அறுவடை இயந்திரம் கிடைக்காததால் ஏமாற்றம்
கூடலுார்: கூடலுார் பகுதியில், நெல் அறுவடைக்கான இயந்திரம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், குறைந்த பெண் ஊழியர்களை கொண்டு நெல் அறுவடை பணி நடந்து வருகிறது. கூடலுார் பகுதி விவசாயிகள் வயல்களில், ஜூன் மாதம் பருவ மழையை தொடர்ந்து, வயல்களில் உழவு பணியை மேற்கொண்டு, ஆடி மாதம், அதிகம் மகசூல் தரக்கூடிய, 'பாரதி; ஐ.ஆர்., 20; கோ-50; கந்தகசால்,' ஆகிய நெல் வகைகளை நடவு செய்தனர். முதிர்ந்த நெற்கதிரை, கடந்த வாரம் அறுவடை செய்ய இருந்தனர். ஆனால், ஊழியர்கள், அறுவடை இயந்திரம் கிடைக்கததால் நெல் அறுவடை துவங்க முடியாமல் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகினர். மாற்று வழி இல்லாத நிலையில், விவசாயிகள் சிலர், பழங்குடியின கிராமங்களுக்கு சென்று, நெல் அறுவடையில் அனுபவம் வாய்ந்த பழங்குடி பெண்களை அழைத்து வந்து நெல் அறுவடை பணியை துவங்கியுள்ளனர். பல விவசாயிகள், ஊழியர்கள் கிடைக்காமல் நெல் அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ளனர் விவசாயிகள் கூறுகையில், 'உற்பத்தி செலவு, தொழிலாளர்கள் கிடைப்பதில் சிரமம், இடுபொருள்களின் விலை உயர்வு, அரசு மானிய உதவிகள் கிடைக்காது உள்ளிட்ட காரணங்களால், கூடலுாரில் நெல் விவசாயம் என்பது ஆண்டுக்கான குறைந்து வருகிறது. குறிப்பிட்ட சில விவசாயிகள் மட்டுமே தொடர்ந்து நெல் விவசாயம் செய்து வருகின்றனர். நடப்பாண்டு நெல் அறுவடை செய்த ஊழியர்கள் கிடைக்காததாலும், வாடகைக்கு நெல் அறுவடை இயந்திரம் கிடைக்க தாமதம் ஏற்பட்டதாலும், குறித்த நேரத்தில் நெல் அறுவடை செய்ய முடியவில்லை. இதனால், நெல் அறுவடையில் அனுபவம் உள்ள பழங்குடியின பெண்களை சிலரை அழைத்து வந்து நெல் அறுவடையை துவங்கி உள்ளோம். பல விவசாயிகள் தொழிலாளர்கள் கிடைக்காமல், அறுவடை இயந்திரத்தை எதிர்பார்த்து காத்துள்ளனர். இதனால் நெற்கதிர்கள் பாதிக்கும் சூழல் உள்ளது. எனவே, அரசு குறைந்த வாடகைக்கு நெல் அறுவடை இயந்திரம் கிடைக்க நடவடிக்கை எடுத்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்,' என்றனர்.