கூடலுாரில் நோய் தாக்குதலால் பாக்கு மகசூல் பாதிப்பு
கூடலூர்: -கூடலூரில், நோய் தாக்குவதால் பாக்கு மகசூல் பாதிப்படைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கூடலூர் பகுதியில், தேயிலை, காபி, ஏலக்காய் தோட்டங்கள் இடையே ஊடுபயிராக குறுமிளகு, பாக்கு மரங்கள் பயிரிட்டு பயனடைந்து வருகின்றனர். பசுந்தேயிலைக்கு போதிய விலை கிடைக்காத நிலையில், ஆண்டுக்கு ஒருமுறை மகசூல் தரும் குறுமிளகு, பாக்கு வாயிலாக கிடைக்கும் வருவாய் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக உள்ளது. நடப்பாண்டு பாக்குக்கு நல்ல விலை கிடைத்தது. மேலும், நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டதால் தேயிலை, காபி தோட்டங்களில் ஊடுபயிராகவும், வயல்களில் தோட்டமாகவும் பாக்கு மரங்கள் பயிரிட்டனர். இந்நிலையில், மரங்களில் விளைந்துள்ள பாக்குகள் நோய் பாதிப்பு ஏற்பட்டு, விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விவசாயிகள் கூறுகையில், 'ஊடு பயிரான பாக்குக்கு அடுத்த ஆண்டு நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. நோய் தாக்குதலால், பாக்கு மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க, தோட்டக்கலைத்துறை உதவ வேண்டும்.' என்றனர். அதிகாரிகள் கூகையில், 'நோய் பாதிக்கப்பட்ட, பாக்கு தோட்டங்களை ஆய்வு செய்து, அதற்கான காரணம் கண்டறிந்து, நோயை தடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்படும்' என்றனர்.