சேதமடைந்த பாட்டவயல் சாலை சீரமைக்காததால் அதிருப்தி
பந்தலுார்; பந்தலுார் அருகே பாட்டவயல் -வெள்ளேரி சாலை சேதமடைந்து பல மாதங்கள் கடந்தும் அதனை சீரமைக்காததால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.பாட்டவயல் ரேஷன் கடை அருகில் இருந்து, செண்பகபாளி வழியாக வெள்ளேரி மற்றும் நம்பியார்குன்னு, அம்பலமூலா, அய்யன்கொல்லி, வயநாடு சீரால் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் குறுக்கே செல்லும் நீரோடை மீது, சிறு பாலம் அமைப்பதற்கு பதில் அதன் மீது இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பெய்த மழையில், இந்தப் பகுதி பாதிக்கப்பட்டு இன்டர்லாக் கற்கள் முழுவதும் பெயர்ந்து சேதமானது. இதனால், இரு சக்கர வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், வாகன ஓட்டுனர்கள் வேறு பகுதிகளில் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மாலை, 7:00 மணிக்கு மேல் யானைகள், வந்து செல்லும் நிலையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், சேதமடைந்த சாலை பகுதியை சீரமைக்காமல் அலட்சியம் காட்டி வருவதால், வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, சாலை முழுமையாக துண்டிக்கப்படும் முன்னர் சீரமைக்க வேண்டியது அவசியம்.