வேலை வாய்ப்பற்றோர் உதவி தொகை வேண்டுமா ? மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம்
ஊட்டி; 'வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுக வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை:மாநில அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் படித்த வேலை வாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாதம் ஒன்றுக்கு எஸ்.எல்.சி., தேர்ச்சி பெறாதவர் களுக்கு, 200 ரூபாய்; தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 300 ரூபாய்; 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வர்களுக்கு, 400 ரூபாய்; பட்டதாரிகளுக்கு, 600 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மாற்று திறனாளிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு, 600 ரூபாய்; மேல்நிலை கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 750 ரூபாய்; பட்டதாரிகளுக்கு, 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுடைய படித்த வேலைவாய்ப்பற்றோர், இந்த உதவி தொகையினை பெறுவதற்கான விண்ணப்பத்தினை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளலாம்.இந்த உதவி தொகை பெற முதல்முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதி உடையவர்கள் படிவங்களை பூர்த்தி செய்த பின், விண்ணப்பத்துடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் துவக்கப்பட்ட கணக்கு புத்தகம், ஆதார் கார்டு, குடும்ப அட்டை மற்றும் அனைத்து கல்வி சான்றுகளை இணைக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தை ஊட்டியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.