வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்திய முதியவர் கைது
ஊட்டி; ஊட்டி அருகே வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்திய முதியவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்த மான் கறி உப்பு கண்டமும் பறிமுதல் செய்யப்பட்டது. ஊட்டி அருகே கீழ்சேலதா பகுதியில் வசித்து வரும் கண்ணன்,64, என்ற முதியவர் தனது வீட்டு தோட்டத்தில் போதை ஏற்படும் செடிகளை வளர்பதாக மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஊட்டி ஊரக இன்ஸ்பெக்டர் வித்யா, எஸ்.ஐ., மகேஷ், தனிப்பிரிவு போலீஸ்காரர் சதீஷ் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். வனத்துறையினரும் அவர்களுடன் இணைந்து சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் பின்புறம் கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததை கண்டறிந்தனர். தொடர்ந்து, அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில் காய வைத்த மான் இறைச்சி, கத்தி போன்றவற்றை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். போலீசார் கூறுகையில், 'கண்ணன் வீட்டு தோட்டத்தில் ரகசியமாக, 18 கஞ்சா செடிகளை வளர்த்து வந்திருக்கிறார். விற்பனைக்கு இல்லாமல் தனது சொந்த தேவைக்காக இதை செய்துள்ளார். அது மட்டும் இல்லாமல் நீண்ட காலமாக இவர் கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரிய வந்தது. கஞ்சா செடிகள் மீது எப்போதும் வாழை இலையை போட்டு மூடி வைத்திருந்ததால் யாருக்கும் தெரியவில்லை. 300 கிராம் கஞ்சாவும் வைத்திருந்தார். கடமான் கறியை உப்புக் கண்டம் போட்டு பயன்படுத்தி வந்திருக்கிறார். 2 கிலோ மான் இறைச்சியும், 5 கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டது,'என்றனர்.