ஏலமன்னா கிராமத்தில் வீடுகளுக்கு மின் இணைப்பு: பழங்குடியின மக்களின் முகத்தில் ஒளி
பந்தலுார்: பந்தலுார் அருகே ஏலமன்னா பழங்குடியின கிராமத்தில், மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில், பழங்குடியின மக்களுக்கு மின் வினியோக அட்டைகளை அதிகாரிகள் வழங்கினர். பந்தலுார் அருகே நெல்லியாளம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பன்னிக்கல் பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள குடியிருப்புகள் சேதமான நிலையில், இவர்களுக்கு, ஏலமன்னா பகுதியில், 19 பேருக்கு அரசு தொகுப்பு வீடுகள் கட்டி தரப்பட்டது. ஆனால், மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி இல்லாத நிலையில், சிரமப்பட்டு வந்த மக்களின் நிலை குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, உடனடியாக மின் வசதி செய்து தர அறிவுறுத்தினார். நேற்று முன்தினம் மின் இணைப்பு வழங்குவதற்கான பணிகளை மின் பணியாளர்கள் மேற்கொண்டு வந்தனர். நேற்று அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டது. மின் இணைப்பை முறையாக செயல்படுத்தி, சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு மின் அட்டை வழங்கும் நிகழ்ச்சி கிராமத்தில் நடந்தது. உதவி செயற்பொறியாளர் கார்த்திக் வரவேற்றார். கூடலுார் ஆர்.டி.ஓ., குணசேகரன் தலைமை வகித்தார். தொடர்ந்து அனைத்து குடியிருப்புகளுக்கும் மின் சப்ளை வழங்கப்பட்டதுடன், மின் அட்டைகள் வழங்கப்பட்டன. இதனால் கடந்த பல மாதங்களாக இருளில் தவித்து வந்த பழங்குடியின மக்கள், மகிழ்ச்சி அடைந்தனர். பந்தலுார் தாசில்தார் சிராஜுநிஷா, செயற்பொறியாளர் முத்துக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். உதவி செயற்பொறியாளர் சர்வேஸ் நன்றி கூறினார்.