உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கனமழையில் சாய்ந்த மின்கம்பங்கள்: சீரமைப்பு பணிகளில் தொய்வு

கனமழையில் சாய்ந்த மின்கம்பங்கள்: சீரமைப்பு பணிகளில் தொய்வு

குன்னூர்: குன்னூர் பகுதிகளில் பெய்யும் கனமழையால், ஏற்படும் பேரிடர் பாதிப்புகளின் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக, இரவில் கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பாலவாசி அருகே ரயில் பாதை பகுதியில் ராட்சத மரம் விழுந்ததில் மின்கம்பிகள் அறுந்து, உயர் மின் அழுத்த கம்பங்கள் முறிந்து விழுந்தன. அப்போது கோவையில் இருந்து ஊட்டிக்கு வந்த அரசு பஸ் அதிர்ஷ்டவசமாக தப்பியது. தீயணைப்புத் துறையினர், போலீசார், தன்னார்வலர்கள், மின்வாரியத்தினர் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். மின்கம்பங்கள் முழுமையாக மாற்றப்படாததால், மவுன்ட் பிளசண்ட் புல்மோர் பள்ளி பகுதிகளில் உள்ள சில குடியிருப்புகளில் மின்தடை நீடித்தது. தாழ்வான பகுதியில் செல்லும் வாகனங்கள் மீது மின் கம்பம் உரசும் அபாய நிலையில் உள்ளது. வண்ணாரப்பேட்டை அருகே விநாயகர் கோவில் தெருவில் சகாய் என்பவரின் வீட்டின் முன்பு மண் சரிவு ஏற்பட்டு, தாழ்வான பகுதியில் உள்ள சத்தார், சுரேஷ் என்பவரின் வீடுகளுக்குள் சேறும், சகதியும் நிரம்பியதால் இங்கு தடுப்புச் சுவர் அமைக்க வலியுறுத்தியுள்ளனர். குன்னூர்-மேட்டுப் பாளையம் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் சீரமைப்பு பணிகளில் தொ ய்வு ஏற்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் மூன்று நாட்கள் ஆகியும் மண் அகற்றப்படாமல் உள்ளது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு இது தொடர்பாக போலீசார் புகார் தெரிவித்தும், பொக்லைன் டிரைவர்கள் இல்லாததால் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என கூறப்பட்டுள்ளது. இரவில் மட்டுமே பெய்து வந்த கனமழை நேற்று பகல் 12 மணியிலிருந்து தொடர்ந்து சாரல் மழையாக நீடித்தது. இதனால் மக்களின் இயல்புவழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குன்னூரில் அதிகபட்ச மழை நேற்று, அதிகபட்சமாக குன்னூரில் 3.6 செ.மீ.,பர்லியாரில் 3.5 செ.மீ.,கோத்தகிரியில் 3.4 செ.மீ., குன்னூர் புறநகரில் 2.4 செ.மீ., தேவாலாவில் 2.3 செ.மீ., மழையளவு பதிவாகி யுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை