மேலும் செய்திகள்
ரேஷனில் பொருட்கள் தட்டுப்பாடு
28-Jul-2025
பந்தலுார்: பந்தலுார் அருகே ரேஷன் கடை கதவை உடைத்து அரிசி மற்றும் சர்க்கரையை யானை ருசித்து சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே கேரளா மாநிலம் செல்லும் நெடுஞ்சாலை ஒட்டி 'மேங்கோரேஞ்ச்' தனியார் எஸ்டேட் அமைந்துள்ளது. இங்குள்ள சாலையை ஒட்டிய பகுதியில் எஸ்டேட் கட்டடத்தில், தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு ரேஷன் கடை உடைக்கும் சப்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து பார்த்துள்ளனர். அப்போது ஒற்றை யானை ரேஷன் கடையின் கதவை உடைத்து, அரிசி மற்றும் சர்க்கரை மூட்டைகளை வெளியே துாக்கி வந்து போட்டு அரிசி, சர்க்கரையை உட்கொண்டு இருப்பதை பார்த்துள்ளனர். தகவலின் பேரில், வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டி உள்ளனர். காலை நேரம், தேவாலா வனச்சரகர் சஞ்சீவி, வட்ட வழங்கல் அலுவலர் விஜயன், கவுன்சிலர் ரமேஷ், கடை விற்பனையாளர் செந்தாமரை உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். வனத்துறையினர் கூறுகையில்,'ரேஷன் கடையை உடைத்தது, இப்பகுதியில் உலா வரும் கட்டை கொம்பன் என்று அழைக்கப்படும் காட்டு யானை. ஏழு மூட்டை அரிசி மற்றும் ஒரு மூட்டை சர்க்கரையை யானை சேதப்படுத்தி சாலையில் சிதறடித்து ருசித்து சென்றுள்ளது. அந்த யானை தற்போது, தேயிலை தோட்டத்தை ஒட்டிய புதரில் முகாமிட்டுள்ளது. யானையை கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது. இரவில் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் நடக்க வேண்டும்,' என்றனர்.
28-Jul-2025