கோடையில் உணவை தேடி இடம்பெயரும் யானைகள் தவிப்பு; பலா மரங்களை வெட்டி அகற்றுவது அதிகரிப்பு
குன்னுார் : குன்னுார் முகாமிட்டுள்ள யானைகளால் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் அச்சத்துடன் தேயிலை பறித்து வருகின்றனர்.குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையோரத்தில், 10 காட்டெருமைகள் முகாமிட்டுள்ளன. பர்லியார் பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள் கல்லார் பகுதிக்கு சென்றன. இதில், ஒற்றை குள்ள கொம்பன் யானை மட்டும், தனியாக பிரிந்து இந்த பகுதிகளில் உலா வருகிறது.ரன்னிமேடு, பால்கார லைன் பகுதிகளில் முகாமிட்டுள்ள ஒற்றை குள்ள கொம்பன் நேற்று காட்டேரி, கிளண்டேல் தேயிலை தோட்டம் பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனால், இப்பகுதி தொழிலாளர்கள் அச்சத்துடன் தேயிலை பறித்து வருகின்றனர். வனத்துறையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'சமீப காலமாக குன்னுார்- மேட்டுப்பாளையம் மலை பாதையோர வனங்களில் இயற்கை வளங்கள் அழிப்பது; மரங்கள் வெட்டுவது என, விதிமீறிய செயல்கள் அதிகரித்து வருகிறது. இதனால், ஆண்டுதோறும் பலா சீசன் காலங்களில் மலைபாதையில் யானைகள் உலா வந்தன.தற்போது, மாவட்ட கலெக்டரின் அனுமதியை வைத்து, கே.என்.ஆர்., குரும்பாடி பகுதியில் மீண்டும் பலா மரங்களை வெட்டி சாய்த்து கடத்தப்பட்டு வருகிறது. இதனால், யானை வழித்தடம், வாழ்விடங்கள் அழிக்கப்படுவதுடன், யானைகளுக்கு உணவு கிடைக்காமல், தடம் மாறி செல்கின்றன, இந்த பகுதியில் மாவட்ட கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து யானை வழித்தடங்களை காப்பாற்ற முன்வர வேண்டும்,' என்றனர்.