கள்ள நோட்டு வழக்கு; கேரளா நபருக்கு 5 ஆண்டு சிறை
கூடலூர்: கள்ள நோட்டு மாற்ற முயன்ற வழக்கில் கேரளா நபருக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம் வடுவன்சால் பகுதியைச் சேர்ந்த ஜோசி, 47, இவர், 2008, ஜூலை 12ம் தேதி பந்தலூர் எருமாடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், இரு சக்கர வாகனத்திற்கு 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு, 1000 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். அந்த நோட்டின் மீது சந்தேகமடைந்த பங்க் ஊழியர், எருமாடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் அந்த நோட்டு கள்ள நோட்டு என தெரியவந்தது. தொடர்ந்து, போலீஸ் வழக்கு பதிவு செய்து ஜோசியை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கூடலூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கு, நேற்று, விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி முகமது அன்சாரி, குற்றம்சாட்டப்பட்ட ஜோசிக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் முருகன் ஆஜரானார்.