ஊழியர்களுக்கான குடும்ப நலநிதி; பண்ணை, பூங்கா பணியாளர்கள் மனு
ஊட்டி; 'ஊழியர்கள் மரணமடைந்தால் அவர்களுக்கான குடும்ப நலநிதியை முறையாக வழங்க வேண்டும்,' என, பூங்கா பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.பண்ணை, பூங்கா பணியாளர் சங்க செயலாளர் மோகன் கலெக்டரிடம் அளித்துள்ள மனு: நீலகிரி மாவட்டத்தில் உள்ள பண்ணை பூங்காவில், 10 ஆண்டுகளுக்கு மேலாக தின கூலி அடிப்படையில் பணிபுரிந்து வந்த ஊழியர்களை அரசாணைப்படி வரன்முறை செய்யப்பட்டு நிரந்தர பண்ணை பணியாளர்களாக நியமனம் செய்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மாத ஊதியத்திலிருந்து குடும்ப நல நிதி, இறப்பு சேம நல நிதி பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. பணியாளர்கள் மரணமடைந்து விட்டால் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டிய குடும்ப நல நிதி வழங்கப்படவில்லை.மேலும், தினக்கூலி, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்கள் நீங்கலாக இதர பணியாளர்கள் பணியில் இருக்கும் போது மரணமடைந்தால் அவர்களுக்கு குடும்ப நலநிதி வழங்கலாம் என, உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், துறை சார்ந்த அதிகாரிகள் வழங்க இயலாது என, மறுத்து வருகின்றனர். கோரிக்கை குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.