உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காய்கறிக்கு சரிவர பணம் பட்டுவாடா செய்யாததால் விவசாயிகள் பாதிப்பு! தனியார் மண்டிகளை நாடுவதால் வருவாய் இழப்பு

காய்கறிக்கு சரிவர பணம் பட்டுவாடா செய்யாததால் விவசாயிகள் பாதிப்பு! தனியார் மண்டிகளை நாடுவதால் வருவாய் இழப்பு

நீ லகிரி மாவட்டத்தில் மலை காய்கறி விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. அதில், ஊட்டி உட்பட சுற்றுவட்டார பகுதிகளில், ஏற்றுமதி செய்யக்கூடிய புருக்கோலி,கேபேஜ் உள்ளிட்ட இங்கிலீஸ்' காய்கறிகளும் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை விற்பனை செய்ய, ஊட்டி மார்க்கெட்டில் என். சி.எம்.எஸ்., கூட்டுறவு ஏல மண்டி செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, சைனீஸ் புருக்கோலி, கேபேஜ், செலரி, குடைமிளகாய் உள்ளிட்ட இங்கிலீஸ் காய்கறிகள் மட்டும் ஏலம் எடுக்கப்படுகிறது. இதனை எலம் எடுக்கும் வியாபாரிகள், காய்கறிகளை 'பேக்கிங்' செய்து சில வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். உள்ளூர் நட்சத்திர ஓட்டல்களுக்கும் விற்பனை செய்கின்றனர்.

பணம் வழங்குவதில் இழுத்தடிப்பு

என்.சி.எம்.எஸ்., கூட்டுறவு மண்டியில் நடக்கும் ஏலத்தில் நிர்ணயிக்கப்படும் விலையை பொறுத்து தான் தனியார் மண்டிகளில் காய்கறிகள் ஏல விடப்பட்டு விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஏல மையத்தில் அன்றைய தினம் நடக்கும் ஏலத்திற்கான தொகை விவசாயிகளுக்கு மறுநாள் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மறுநாள் தர வேண்டிய பணமும் சமீப காலமாக முறையாக வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து விவசாயிகள் உயர் அதிகாரிகளுக்கு பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், நேற்று, ஏல மண்டிகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட காய்கறிகளை என்.சி.எம்.எஸ்., மண்டியில் ஏல விடாமல், 'பணம் பட்டுவாடா பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின் தாமதமாக , நண்பகல், 12:00 மணிக்கு ஏலம் விடப்பட்டது.

தனியாரை நாடும் விவசாயிகள்

இந்த பிரச்னை குறித்து, விவசாயிகள் அறிவழகன், கணேசன் கூறுகையில், ''தனியார் மண்டிகளில், 100 ரூபாய்க்கு 10 ரூபாய் கமிஷன், என்.சி.எம்.எஸ்., மண்டியில், 100 ரூபாய்க்கு, 7 ரூபாய் கமிஷன் தொகை எடுக்கப்படுகிறது. கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் என்.சி.எம்.எஸ்., மண்டியை நாடி வருகின்றனர். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பணம் பட்டுவாடா செய்கின்றனர். சமீபகாலமாக சரிவர பணம் பட்டுவாடா செய்வதில்லை. அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பெரும்பாலான விவசாயிகள் வேறு வழியின்றி தனியார் மண்டி களை நாடி செல்கின்றனர். வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வுகான கூட்டுறவு துறை அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர். நீலகிரி மாவட்டம் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா கூறுகையில்,''என்.சி.எம்.எஸ்., மண்டியில் 'இங்கிலீஸ்' காய்கறி விவசாயிகளுக்கு உள்ள பிரச்னை குறித்து எனக்கு இதுவரை புகார் ஏதும் வரவில்லை. எனவே, நேரில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளின் பிரச்னை தீர்க்கப்படும்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி