நெல் நாற்றுகள் நடவு பணியில் விவசாயிகள் பிசி; நடவு பணியில் பழங்குடியினர் ஆர்வம்
கூடலுார்: கூடலுாரில் வயல்களில் நெல் நாற்றுகள் பறித்து நடவு செய்யும் பணியில் பழங்குடியினர் பாரம்பரிய உடையுடன் ஈடுபட்டுள்ளனர். கூடலுார் விவசாயிகள் வயல் நிலங்களில் பருவமழை காலத்தில், நெல் சாகுபடி ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், காலநிலை மாற்றம், பாசன நீர் பற்றாக்குறை காரணங்களால், பருவமழை காலத்தில் மட்டும் நெல் விவசாயம் செய்து வருகின்றனர். ஆடி மாதம் துவக்கத்தில், விதை நெல் விதைத்து, நாற்றுகள் பறித்து நடவு செய்து, நவ., டிச., மாதங்களில் அறுவடை செய்து வருகின்றனர். நடப்பாண்டு, முன்னதாகவே பருவமழை துவங்கியதால் வயல்களில் நெல் விவசாயத்துக்கான தண்ணீர் தடையின்றி கிடைத்து வருகிறது. தொடர்ந்து, ஆடி மாதம் துவக்கத்தில் விதை நெல் விதைத்தனர். தொடர்ந்து, வயல்களில் டிராக்டர் மூலம் உழவு பணிகளை மேற்கொண்டு, நெல் நாற்றுகளை பறித்து நடவு செய்யும் பணியை துவங்கி உள்ளனர். இப்பணியில் பழங்குடியின பெண்கள், தங்கள் பாரம்பரிய உடையணிந்து ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் கூறுகையில், 'கூடலுார் பகுதியில், முன்பு ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் விவசாயம் நடைபெற்றது. பாசன நீர் பற்றாக்குறை, தொழிலாளர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிரமம், இடு பொருள் மற்றும் தொழிலாளர்கள் சம்பள உயர்வு போன்ற காரணங்களால், நெல் விவசாயம் சில நுாறு ஏக்கராக குறைந்துவிட்டது. இதற்கு, அரசின் சார்பில் எந்த, மானிய உதவியும் கிடைக்காததும் ஒரு காரணமாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், நெல் விவசாயம் என்பது மறைந்துவிடும் ஆபத்து உள்ளது. எனவே, அரசு நெல் விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க, நெல்லுக்கான மானிய உதவிகளை, கூடலுார் விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்,' என்றனர்.