முதுமலையில் உலா வந்த பெண் புலி உயிரிழப்பு
கூடலுார்; முதுமலை மசினகுடி வனக்கோட்டம், சிங்கார வன சரகத்துக்கு உட்பட்ட, கல்குவாரியை ஒட்டி வயது முதிர்ந்த புலி ஒன்று, மெதுவாக நடந்து செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சரகர் தனபால் மற்றும் வன ஊழியர்கள் அப்பகுதியை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, 8 தானியங்கி கேமராக்கள் பொருத்தி, வன ஊழியர்கள் சுழற்சி முறையில், 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். 'புலி நடமாட்டம் உள்ள பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது; கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடக்கூடாது,' என, வனத்துறையினர் அறிவுறுத்தினர். இந்நிலையில், நேற்று மாலை 6 மணிக்கு அந்த புலி உயிரிழந்தது. இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.