உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு புதிய மருத்துவமனையில் இறுதி கட்ட பணி.. திறப்பு விழா எப்போது...?

அரசு புதிய மருத்துவமனையில் இறுதி கட்ட பணி.. திறப்பு விழா எப்போது...?

ஊட்டி; ஊட்டியில், புதிய மருத்துவ கல்லுாரி மருத்துவ மனைக்கான கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புத்தாண்டில் திறப்பு விழா நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில், உயர்தர மருத்துவ வசதி இல்லாததால் இங்குள்ள மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக, கோவை மாவட்டம் மற்றும் கேரளாவுக்கு செல்லும் நிலை இருந்தது. பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அமைக்க கடந்த ஆட்சியின் போது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஊட்டி அருகே கால்ப் கிளப் பகுதியில் மருத்துவமனை; பட்பயரில் மருத்துவ கல்லுாரி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு, 447 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் துவக்கப்பட்டது. அதில், மருத்துவ கல்லுாரிக்கான கட்டுமான பணிகள் முடிந்து மருத்துவ கல்லுாரி மாணவர்கள் சேர்க்கப்பட்டு கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இறுதி கட்ட பணிகள் இங்கு, 'பொது பணித்துறை, மருத்துவ துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரியம்,' என, மூன்று துறைகள் இணைந்து புதிய மருத்துவமனைக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், ஊட்டியில் நிலவும் காலநிலை மாற்றம், நிர்வாக பணியில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் உள்ளிட்ட காரணங்களால் கட்டுமான பணிகள்; குடிநீர் தேவை முழுமை பெறாமல் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இழுபறி நிலை தொடர்ந்தது. தற்போது, இறுதி கட்ட பணிகள் விரைவாக நடந்து வந்தாலும், திறப்பு விழா தேதி மட்டும் இன்னும் முடிவாகவில்லை. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரமேஷ் கூறுகையில், ''மருத்துவமனையில் உடல்கூறு பிரிவு; உடலியல் பிரிவு; நுாலகபிரிவு; நோயியல் பிரிவு; அவசர சிகிச்சை பிரிவு; அறுவை சிகிச்சை அரங்கு; மயக்கவியல்; உயர் தொழில் நுட்ப பரிசோதனை மையம் உள்ளிட்ட துறைகளின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. மருத்துவமனை வளாகத்தில் சாலை, நடைப்பாதை உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. பொது பணி துறை சார்பில், 95 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது,''என்றார்.

ரூ.30 கோடி தேவை

குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செல்வகுமார் கூறுகையில், ''ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, மாணவ, மாணவியர் விடுதி, குடியிருப்புக்கு தினசரி, 9 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இந்த வளாகத்தில் மூன்று கிணறுகள் உள்ளன. மூன்று இடத்தில் போர்வெல் அமைக்கப்பட்டது. அதில், இரண்டில் தண்ணீர் வரவில்லை. ஒரு போர்வெல் மட்டும் செயல்பாட்டில் உள்ளது. குடிநீர் தேவைக்காக, 30 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு ஏற்கனவே அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நிதி இன்னும் வரவில்லை. அது வரை தண்ணீர் தேவையை லாரிகள் மூலம் கொண்டு வந்து பூர்த்தி செய்வதாக மருத்துவ துறையினர் தெரிவித்துள்ளனர்,'' என்றார்.

தயாராக இருக்க அறிவுறுத்தல்...

ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி கூறுகையில்,''புதிய மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. மருத்துவ உபகரணங்களும் கொண்டு வரப்பட்டு அந்தந்த துறைக்கு அனுப்பப்ட்டுள்ளது. 'ஜன., முதல் வாரத்தில் திறக்க திட்டம் உள்ளது; தயார் நிலையில் இருக்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த தேதியில் திறப்பு விழா என்ற துறை ரீதியான தகவல் எங்களுக்கு வரவில்லை. தகவல் வந்த பின், பழைய மருத்துவமனையிலிருந்து ஒவ்வொரு பிரிவாக படிப்படியாக மருத்துவ கல்லுாரிக்கு மாற்ற திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை