45 ஆண்டுகளாக தகர செட்டில் தீயணைப்பு நிலையம்; புதிய வாகனங்களை நிறுத்த இடமில்லை; நிரந்தர கட்டடம் வருமா?
கூடலுார்; கூடலுார் தீயணைப்பு நிலையம், 45 ஆண்டுகளாக எந்த அடிப்படை வசதியும் இன்றி தகர செட்டில் செயல்பட்டு வருவது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.கூடலுார் தீயணைப்பு நிலையம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, பழைய கோர்ட் சாலையில், 1980ல், தகர செட்டில் துவங்கப்பட்டது. கடந்த, 45 ஆண்டுகளாக, அதே இடத்தில் அதே நிலையில் போதுமான அடிப்படை வசதிகள் இன்றி தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. எனினும், வேறு வழியின்றி தீயணைப்பு வீரர்கள், 24 மணி நேரமும் அதில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.மேலும், தீயணைப்பு வாகனங்களை நிறுத்தவும், மீட்பு உபகரணங்களை வைக்க பாதுகாப்பான இடவசதி இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். இங்கு பணியாற்றும் தீயணைப்பு வீரர்கள் வழக்கமான பணிகளுடன் கோடை காலத்தில் வனத்தீயை கட்டுப்படுத்தும் பணியிலும் பருவமழை காலங்களில் சாலை மற்றும் வீடுகளில் மீது விழும் மரங்களை அகற்றும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது, பெய்து வரும் பருவமழையில், அதே தகர செட்டில், சிரமப்பட்டு தங்கி மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இங்கு, மீட்பு பணிக்காக ஒரு பெரிய மற்றும் இரண்டு சிறிய தீயணைப்பு வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது. அவசர தேவைக்காக, ஊட்டியில் இருந்து கூடுதலாக ஒரு வாகன வரவழைத்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், அனைத்து மீட்பு உபகரணங்களுடன் கூடிய மேலும், புதிய தீயணைப்பு வாகனம், கூடலுார் தீயணைப்பு துறைக்கு நேற்று வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீயணைப்பு நிலையம் மட்டும், 45 ஆண்டுகளாக தகர செட்டில் செயல்பட்டு வருவது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'அவசர காலங்களில் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் தீயணைப்பு வீரர்கள், நிரந்தர கட்டடம் இன்றி தகர செட்டில், அச்சத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர். பருவமழையின் போது பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மீட்பு பணிக்காக புதிய வாகனங்கள் வழங்கிய அரசு, தகர செட்டுக்கு மாற்றாக தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.