உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆறுகளில் வெள்ளம்: ஆங்காங்கே விழுந்த மரம்

ஆறுகளில் வெள்ளம்: ஆங்காங்கே விழுந்த மரம்

--நிருபர் குழு-நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீலகிரிக்கு 'ரெட் அலர்ட்' அறிவிப்பால் கடந்த இரண்டு நாட்களாக பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது. உல்லட்டி சாலை, புதுமந்து, லவ்டேல் பகுதிகளில் மரங்கள் விழுந்தது. தீயணைப்பு மீட்பு குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்று பவர்ஷா உதவியுடன் மரத்தை அறுத்து அகற்றினர். ஊட்டி அருகே இத்தலார் எமரால்டு சாலை, பெம்பட்டி சாலையில் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியில், 'மண் ஆணி' அமைக்கப்பட்ட இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. மஞ்சனக்கொரை அன்பு அண்ணா நகரில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நடைபாதை , வீடுகளின் முன்பு தடுப்பு சுவர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் போதிய அளவில் நிறைவேற்றப்படவில்லை. தற்போது பெய்த மழைக்கு ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மழை தொடரும் பட்சத்தில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் வீடுகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பந்தலுார்

பந்தலுார் ஆற்றின் கரையோரங்களில் உள்ள சேலைக்குன்னா, வாழவயல், சர்க்கரை குளம், பாலாவயல் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆற்றின் கரையை கடந்து வெள்ள பெருக்கு ஏற்பட்டால், அப்பகுதி மக்கள் உடனடியாக அருகில் உள்ள நிவாரண முகாம்களுக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உப்பட்டி பெருங்கரை பகுதியில் சாரதா என்பவரின் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர்.சேரம்பாடி அருகே நாயக்கன் சோலை பகுதியில் கணபதி என்பவரின் வீட்டின் பின் பகுதியில், மண் சரிவு ஏற்பட்டது. எருமாடு அருகே கள்ளிச்சால் மற்றும் குந்தலாடி அருகே தானிமூலா செல்லும் சாலைகளின் குறுக்கே மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. பிதர்காடு அருகே சந்தக்குன்னு, ஓர்கடவு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. வீடுகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கூடலுார்

கூடலுார் தேவாலா பகுதிகளில் தொடரும் பருவமழையால், பாண்டியார் -புன்னம்புழா மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 'பொதுமக்கள் ஆறுகளுக்கு செல்ல வேண்டாம்,'என, எச்சரித்துள்ளனர். இருவயல் கிராமத்தில் காற்றில்ஆயிரக்கணக்கான நேந்திரன் வாழை மரங்கள் சாய்ந்து பாதிப்பு ஏற்பட்டது. மரங்கள் மின் கம்பி மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்ததால், பல கிராமங்களில், 3 வது நாளாக மின் சப்ளை இன்றி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கூடலுார் வந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் லலிதா, கூடலுார் அரசு மருத்துவமனை, புத்துார்வயல் பழங்குடியினர் கிராமம், இரு வயல் கிராமங்களில் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் கூறுகையில், ''மழையினால் பாதிப்புகளை கண்காணித்து, உதவிட மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. பாதிக்கப்படும் மக்கள் உடனடியாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்க அரசுத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்,'' என்றார்.இதேபோல, கோத்தகிரி - ஊட்டி இடையே, பாக்கிய நகர் தாந்த நாடு, ரிவர்சைடு பள்ளி சாலை, கிரீன்வேலி சாலை மற்றும் மினிதேன் சாலைகளில் பல மரங்கள் விழுந்தன. இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கோத்தகிரி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பவர்ஷா உதவியுடன் மரங்களை அகற்றினர். போக்குவரத்து சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை