காட்டேரி பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக மலர் நாற்று நடவு பணி
குன்னுார்; குன்னுார் காட்டேரி பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக, 1.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு பணி நேற்று துவங்கியது. குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலையில், பசுமை சூழ்ந்த மலைகள், தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சி ஆகியவை சூழ்ந்த இடத்தில் காட்டேரி பூங்கா அமைந்துள்ளது. செப்., 3வது வாரத்திற்கு பிறகு, துவங்கும், 2வது சீசனுக்காக மலர் நாற்று நடவு பணி நேற்று துவங்கியது. பூங்காவில் பூஜைகள் போடப்பட்டு, நீலகிரி தோட்டக்கலை துணை இயக்குனர் நவநீதா, நடவு பணியை துவக்கி வைத்து கூறுகையில்,''குன்னுார் காட்டேரி பூங்காவில் கடந்த ஆண்டு ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இங்கு முதல்முறையாக நடத்தப்பட்ட மலை பயிர் கண்காட்சி, சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டு, 2 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் சீசன் நடவு பணிக்காக, 'மேரி கோல்டு, பிளாக்ஸ், பெகோனியா, பாஸ்சம். சால்வியா, டயான்தஸ், ஆஸ்டர், ஜினியா, வெர்பினா,' உட்பட, 30 வகையான மலர் விதைகள் ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து உட்பட பல்வேறு நாடுகள் மற்றும் காஷ்மீர், கொல்கத்தா உட்பட நம் நாட்டின் பகுதிகளிலும் இருந்து வரவழைக்கப்பட்டு, நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டது. இவற்றில், 1.5 லட்சம் நாற்றுகள் நடவு செய்யப்படும்,'' என்றார். நிகழ்ச்சியில், குன்னுார் தோட்ட கலை துறை உதவி இயக்குனர் விஜயலட்சுமி, தோட்டக்கலை அலுவலர் பிரகாஷ் மற்றும் பண்ணை பணியாளர்கள் பங்கேற்றனர்.