உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோத்தகிரி அஜ்ஜூர் கிராமத்தில், 140 வீடுகளை காலி செய்ய வனத்துறை நோட்டீஸ்! 2008ல் அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியும் குழப்பம்

கோத்தகிரி அஜ்ஜூர் கிராமத்தில், 140 வீடுகளை காலி செய்ய வனத்துறை நோட்டீஸ்! 2008ல் அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியும் குழப்பம்

நீ லகிரி மாவட்டத்தில், 400க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகர் சமுதாய மக்கள் பல தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். அதில், கோத்தகிரி அருகே கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட அஜ்ஜூர் கிராமத்தில், 350 படுகர் இன குடும்பங்கள், 300 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில், பள்ளி, சமுதாய கூடம் மற்றும் சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. மின் இணைப்பு பெற்றுள்ளனர். தவிர, கிராமத்தை ஒட்டியுள்ள விவசாய நிலத்துக்கு குத்தகை செலுத்தி அனுபவித்து வருகின்றனர். இங்குள்ள, 180 வீடுகளுக்கு, 2008ம் ஆண்டு வருவாய் துறை வாயிலாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும், 105 வீடுகளுக்கு இலவச பட்டா, ஊட்டியில் முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில், வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் வழங்கவில்லை. வனத்துறைநோட்டீசால் அதிர்ச்சி இந்நிலையில், 'அஜ்ஜூர் கிராமத்தில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள், நீலகிரி வடக்கு வனக்கோட்டம், கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்டது,' என, தெரிவித்து, 140 வீடுகளை காலி செய்ய வனத்துறை நோட்டீஸ் வினியோகித்தது. வனத்துறை நடவடிக்கையால் அஜ்ஜூர் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்து அப்போதைய மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் முறையிட்டனர். அவர், 'அப்பகுதியிலிருந்து யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள்; அப்பகுதி நில அளவை செய்ய வனத்துறையினர் அடங்கிய குழு அமைக்கப்படும்; வன உரிமை சட்டத்தின் கீழ் அப்பகுதியில் விவசாயம் மற்றும் குடியிருப்பதற்கான சான்று வழங்குபவர்களுக்கு அனுபோகம் வழங்கப்படும்,' என, தெரிவித்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் அஜ்ஜூர் பகுதியில் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் வனத்துறை இறங்கியுள்ளதால், அந்த நடவடிக்கையை நிரந்தரமாக நிறுத்தக்கோரி, அஜ்ஜூர் கிராம நலச்சங்க தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தற்போதைய கலெக்டர் லட்சுமி பவ்யாவை சந்தித்து மனு அளித்தனர். அப்போது, 'வனத்துறையிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என, அவர் உறுதி அளித்தார். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. தொடர்ந்து, ஊட்டியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மீண்டும் மக்கள் மனு அளித்தனர். அஜ்ஜூர் கிராம நலச்சங்க தலைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து, எங்கள் மனு மீதான நடவடிக்கை குறித்து கேட்டபோது, வனத்துறையுடன் பேசியுள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எந்த பிரச்னையும் ஏற்படாது என்று தெரிவித்தார். பிரச்னைக்கு தீர்வு கிடைக்காதபட்சத்தில் கோர்ட்டில் வழக்கு தொடர ஆலோசித்துள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை