உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாலை 6 மணிக்கு பின் காய்கறி வாகனம் இயக்க தடை விதிக்க வனத்துறை பரிந்துரை

மாலை 6 மணிக்கு பின் காய்கறி வாகனம் இயக்க தடை விதிக்க வனத்துறை பரிந்துரை

கூடலுார்; 'முதுமலையை ஒட்டிய கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பக சாலையில் மாலை, 6:00 மணிக்கு பின் காய்கறி வாகனங்கள் இயக்க தடை விதிக்கும் வனத்துறையின் பரிந்துரையை ஏற்க கூடாது,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி, கர்நாடக பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இவ்வழியாக மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. வனவிலங்குகள், பாதுகாப்பை கருத்தில் கொண்டு இச்சாலையில் இரவு, 9:00 முதல் காலை, 6:00 மணி வரை, வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு அரசு பஸ் மட்டும் இயக்கப்படுகிறது. இந்நிலையில், பந்திப்பூர் புலிகள் காப்பகம் மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சமீப காலமாக காட்டு யானை ஒன்று, உணவுக்காக காய்கறி வாகனங்களை தடுத்து நிறுத்தி, ஓட்டுனர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த யானையை பகலில் கண்காணித்து வரும் பந்திப்பூர் வனத்துறையினர், 'இரவில், யானையை கண்காணிப்பதில் சிரமமாக உள்ளதால், மாலை, 6:00 மணிக்கு பின், காய்கறி வாகனங்களை மட்டும், இயக்க தடை விதிக்க வேண்டும்,' என, கர்நாடகா அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள, காய்கறி வியாபாரிகள் கூறுகையில், 'கர்நாடகாவிலிருந்து, கேரளா, நீலகிரிக்கு இவ்வழியாக அதிக அளவில் காய்கறி கொண்டு செல்லப்படுகிறது. மாலை, 6:00மணிக்கு பின், காய்கறி வாகனங்கள் இயக்க தடை விதித்தால், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். எனவே, வனத்துறையின் பரிந்துரையை கர்நாடகா அரசு ஏற்க கூடாது,' என, கூறி உள்ளனர். வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'வீடியோ காலர் பொருத்தி, யானையை கண்காணிப்பது மூலம், பிரச்னைக்கு தீர்வு காணலாம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை