| ADDED : பிப் 23, 2024 11:13 PM
பந்தலுார்;பந்தலுார் அருகே உள்ள விலங்கூர் பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.நேற்று முன்தினம் இரவு, விலங்கூர் பகுதியில் தோமஸ் என்பவரின் வாழை தோட்டத்தில் யானை புகுந்தது.சோலார் வேலிகளை உடைத்து, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நேந்திரன் வாழை மரங்களை சேதப்படுத்தியது. தகவலறிந்த பிதர்காடு வனச்சரகர் ரவி, வனவர் ஜார்ஜ்பிரவீன்சன் உள்ளிட்ட, வனக்குழுவினர் நேரடி ஆய்வு செய்தனர். விவசாயிகள் கூறுகையில், 'கும்கி யானைகள் உதவியுடன், யானையை பிடித்து செல்ல வேண்டும். அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும்,' என்றனர்.வனவர் ரவி கூறுகையில், 'பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்படும். யானையை துரத்துவதாக கூறி, பொதுமக்கள் யானை அருகே செல்ல கூடாது. விவசாய பயிர்களை அழித்தால் இழப்பீடு பெறலாம். மனித உயிர் அதைவிட முக்கியம். எனவே யானை நடமாட்டம் இருப்பதாக தெரிந்தால், வனத்துறைக்கு தகவல் தெரிவிப்பதுடன், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்,' என்றனர்.தொடர்ந்து வனக்குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.