யானைகள் வழித்தடத்தில் பிளாஸ்டிக் கழிவுகள்; அகற்றிய வனத்துறை, தன்னார்வலர்கள்
பந்தலுார்; பந்தலுார் அருகே யானை வழித்தடத்தில் குவிந்து கிடந்த 'பிளாஸ்டிக்' கழிவுகளை வனத்துறையினர், தன்னார்வலர்கள் அகற்றினர்.பந்தலுார் அருகே, நெலாக்கோட்டை பகுதி அமைந்துள்ளது. இரு மாநில எல்லையில் உள்ள இந்த பகுதியில், குடியிருப்புகள், அரசு ஆரம்ப மற்றும் உயர்நிலை பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், விலங்கூர் கிராமம் செல்லும் சாலை மற்றும் கடைகள், பள்ளிவாசல் மற்றும் கோவில்கள் அமைந்துள்ளன. இதனால், மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது.இந்த பகுதியில் தனியார் எஸ்டேட்டிற்கு சொந்தமான வனப்பகுதி உள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து வெளியேறும் யானைகள், இந்த பகுதியில் முகாமிடுவதுடன், புதர்கள் வழியாக சாலையை கடக்கின்றன. யானைகள் வந்து செல்லும் பகுதியில் நெலாக்கோட்டை ஊராட்சி குப்பைகளை கொட்டி வருகிறது. வனத்துறை மூலம் எச்சரிக்கை பலகை வைத்தபோதும் ஊராட்சி கண்டு கொள்ளவில்லை. குப்பை கழிவுகளை உட்கொள்ள யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இந்த இடத்திற்கு வந்து செல்கிறது.இதனை தொடர்ந்து, கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ்பிரபு தலைமையில், உதவி வன பாதுகாவலர் கருப்பையா, வனச்சரகர்கள் ரவி, சஞ்சீவி, வனவர் பெலிக்ஸ் மற்றும் வனத்துறையினர், ஊராட்சி துாய்மை காவலர்கள், தன்னார்வலர்கள் இணைந்து பிளாஸ்டிக் உள்ளிட்ட மட்காத குப்பைகளை தனியாக சேகரித்து ஊராட்சியில் ஒப்படைத்தனர். மட்கும் குப்பைகளை தாழ்வான பகுதியில் வைத்தனர். வனத்துறையினர் கூறுகையில், 'இனி அந்த பகுதியில் குப்பைகள் கொட்டக்கூடாது. குப்பை கொட்ட இடம் கொடுத்தால் எஸ்டேட் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.