உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்

-–நிருபர் குழு– நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கூடலுார் விநாயகர் கோவிலில் காலை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கியது. உள்ளூர் பக்தர்கள் திரளாக பங்கேற்று விநாயகரை தரிசித்தனர். அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர் ஊர்வலமாக கோவிலை சுற்றி உலா வந்தார். *இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் கூடலுார், ஓவேலி, மசினகுடி, நடுவட்டம் பகுதிகளில் கோவில் வளாகங்கள், பொது இடங்கள உள்ளிட்ட, 140 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜித்து வருகின்றனர். வரும், 21ம் தேதி, கூடலுார் பகுதியில் பூஜிக்கப்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, பாண்டியார் -புன்னம்புழா ஆற்றிலும்; மசினகுடி பகுதியில், பூஜிக்கப்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மரவக்கண்டி அணையிலும்; நடுவட்டம் பகுதியில் பூஜ்யிக்கப்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து சொல்லப்பட்டு டி.ஆர்., பகுதியில் விசர்ஜனம் செய்ய உள்ளனர். * குன்னுார் அகில பாரத இந்து மகா சபா மற்றும் பொதுமக்கள் இணைந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகின்றன. ‘இயற்கையைக் காக்கும் இந்து மதம்’ என்ற கருப்பொருளில் நடக்கும் இவ்விழாவை தொடர்ந்து, 10,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. நேற்று கணபதி ஹோமத்துடன் சேலாஸ், முசாபுரி உட்பட, 20 இடங்களில் அனுமன் அலங்காரம் உட்பட பல்வேறு அலங்காரங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. 16 வரை கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடக்கிறது. நிறைவு நாளான, 16ம் தேதி மதியம், 2:00 மணிக்கு சிம்ஸ் பார்க்கிலிருந்து லாஸ்பால்ஸ் வரை விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது. *கோத்தகிரி ஒன்னதலை அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கோலாகலமாக நடந்தது. அதிகாலை முதல், ஐயனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. பகல், 1:30 மணி அளவில், அலங்கரிக்கப்பட்ட ஐயன் கோவிலை சுற்றி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் பஜனை, ஆடல் பாடல் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி இடம் பெற்றது. தொடர்ந்து, சிறுவர் முதல் பெரியவர் வரை பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதேபோல, ஊட்டி பாம்பேகேசில் சக்தி விநாயகர், இரட்டை பிள்ளையார் கோவில், விட்டோபா கோவில், எச்.எம்.டி., கோவில், காந்தள், காசிவிஸ்வநாதர் கோவில் உள்ள விநாயகர் கோவில், பர்பயர் விநாயகர் கோவில் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ