பூண்டு விலை கிடுகிடு உயர்வு; கிலோ ரூ. 200 வரை விற்பனை
குன்னுார்; ஊட்டி பூண்டு கிலோ, 200 ரூபாய் வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஊட்டி, குன்னுார், கோத்தகிரி பகுதிகளில், 1,500 ஏக்கர் பரப்பளவில் பூண்டு விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதியில், ஒரு கிலோ பூண்டு, 600 ரூபாய் முதல் சில ரகம், 1000 ரூபாய் வரை விற்பனையான நிலையில் நடப்பாண்டு மார்ச் மாதத்தில் இருந்து, தொடர்ந்து விலை சரிவு ஏற்பட்டது. கடந்த ஜூன் மாத இறுதியில் மேட்டுப்பாளையம் ஏலத்தில், 50 முதல் 85 ரூபாய் வரை ஏலம் போனது. இந்நிலையில், நடப்பு வார ஏலத்தில், 135 முதல் 200 ரூபாய் வரை ஏலம் போனது.இதுவரை வீழ்ச்சியடைந்து நிலையில், திடீரென விலை உயர்வு ஏற்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.விவசாயி விஸ்வநாதன் கூறுகையில், '' பூண்டு விற்பனையில் கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டதால், நடப்பாண்டு பூண்டு உற்பத்தி குறைந்தது. இதனால், தற்போது, விலை உயர்வு ஏற்பட்டது,'' என்றார்.