உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க கண்ணாடி பாட்டில் தோரணங்கள்

காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க கண்ணாடி பாட்டில் தோரணங்கள்

பந்தலுார்; கூடலுார், பந்தலுார் கிராம பகுதியில் காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க கண்ணாடி பாட்டில் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. கூடலுார், பந்தலுார் பகுதியில், 80-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உள்ளன. அதில், குறிப்பாக, 15 யானைகள் நாள்தோறும் மக்கள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய தோட்டங்களுக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன. விவசாய தோட்டங்கள் மற்றும் வீட்டு தோட்டங்களில் விளை பொருட்களை ருசித்து பழக்கம் கொண்ட யானைகள், தங்களின் உணவு பழக்கத்திலிருந்து மாறி, விவசாய பயிர்களை உட்கொள்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளன. ஒரு புறம், 'யானை வரும் பாதையில் சோலார் மின் வேலிகள், அகழி அமைக்க வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மறுபுறம், யானை வருவதை தடுக்க மக்கள் நுாதன முறைகளை பின்பற்றி வருகின்றனர். அதில், பல கிராமங்களில் யானைகள் வந்து செல்லும் பாதைகள் மற்றும் குடியிருப்புகளை ஒட்டிய பகுதிகளில், கண்ணாடி பாட்டில்களை கயிறுகளில் கட்டி தொங்க விட்டுள்ளனர். இரவில் யானைகள் வரும்போது பாட்டிலில் மோதும் போது, அதில் எழும் சப்தம் கேட்டு யானைகள், அங்கிருந்து ஓடிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. மக்கள் கூறுகையில்,'இது நிரந்தரமான தீர்வு இல்லை என்றாலும், தங்கள் உயிரையும், உடைமைகளையும் தற்காத்து கொள்ளும் தற்காலிக வழிமுறையாகும். எனினும், வனத்துறையினர் ஊருக்குள் வரும் யானைகளை அடர்ந்த காடுகளுக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ