உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வீடுதோறும் சென்று ஓய்வூதிய தொகை வழங்க தடை முதியோர் அலைக்கழிப்பு!

வீடுதோறும் சென்று ஓய்வூதிய தொகை வழங்க தடை முதியோர் அலைக்கழிப்பு!

குன்னுார் : மாநில அரசின் முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளி உதவித்தொகை வீடுகளுக்கு சென்று நேரடியாக வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால், நீலகிரி மாவட்ட பயனாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மாநில அரசின் முதியோர் உதவித்தொகை மற்றும் விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்காக மாதம் தோறும் கொடுக்கப்படும் உதவித்தொகை, 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்படுகிறது. வங்கி சேவையை, வாடிக்கையாளருக்கு வழங்கும் முகவர்கள், தொகையை நேரடியாக வீடுகளுக்கு சென்று பயனாளிகளுக்கு வழங்கி வந்தனர்.தற்போது, இந்த தொகையை நேரடியாக சென்று வழங்குவதற்கு மாநில அரசு தடை விதித்து, வங்கிகளுக்கு நேரடியாக பயனாளிகள் வந்து, கை ரேகைகளை பதிவிட்டு பெற்று கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இதனால், மலை மாவட்ட பயனாளிகளுக்கு மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பழங்குடிகள் பாதிப்பு

வங்கி முகவர்கள் கூறுகையில், 'பஸ் வசதி இல்லாத சேம்பக்கரை பழங்குடியின கிராமத்தில் உள்ள, 9 பயனாளிகள் 2 கி.மீ., துாரம் நடந்து வந்து, ஆடர்லி பஸ்சில் குன்னுார் வந்து வாங்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று மாவட்டத்தில் பல பழங்குடி கிராம மக்கள் போக்குவரத்து சிரமத்தால் பணம் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்,' என்றனர்.குன்னுார் காந்திபுரம் சமூகநல ஆர்வலர் டேவிட் கூறுகையில், ''மலை மாவட்டமான நீலகிரியில், முதியோர், மாற்றுத்திறனாளிகள் வங்கி மற்றும் ஏ.டி.எம்.,களுக்கு சென்று பணம் எடுப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. ஆட்டோவிற்கு செலவு செய்து சென்றாலும் அங்கு வங்கி பணியாளர்களுக்கும் வேலை சுமை அதிகரிப்பதால், பயனாளிகள் பல மணி நேரம் காத்திருக்கின்றனர். மலை மாவட்ட பயனாளிகளுக்கு பழைய முறைப்படி வீடுகளுக்கு சென்று ஓய்வூதியம் வழங்கும் முறையை தொடர வேண்டும். இதற்காக அரசு விதியில் மாற்றம் செய்ய வேண்டும். மாநிலம் முழுவதும் தபால் ஊழியர்கள் மணியார்டர் கொடுப்பது போன்று, நேரடியாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்,'' என்றார்.சிறப்பு தாசில்தார் ஜவகர் கூறுகையில்,''முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முகவர்கள் மூலமாக இதுவரை இந்த தொகை நேரடியாக சென்று வழங்கப்பட்டது. அவர்களுக்கான 'கமிஷன்' தொகை நிறுத்தப்பட்டதால், சேவை தொடர முடியாத நிலை உள்ளது. மலை மாவட்டம் என்பதால், அரசு உயர் அதிகாரிகளுக்கு இதில் உள்ள சிக்கல்கள் குறித்து தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

ஆட்டோவுக்கு ரூ.600 செலவு!

குன்னுார் பெரிய வண்டிச்சோலையை சேர்ந்த காளியம்மாள்,70, என்பவர் கூறுகையில், ''ஒரு கண் ஆபரேஷன் செய்துள்ள நிலையில், 1,200 ரூபாய் ஓய்வூதிய நிதி பெற ஆட்டோவில் தான் செல்ல வேண்டும். 'இங்கிருந்து குன்னுார் ஸ்டேட் வங்கிக்கு செல்ல, 250 ரூபாய்; வெயிட்டிங் சார்ஜ், 100; வருவதற்கு 250,' என, மொத்தம், 600 ரூபாய் ஆட்டோவுக்கு வாடகை கேட்கின்றனர். அங்கு சென்று வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வங்கியிலும் எனது மகள் தீபா சென்று கேட்டபோது, அங்கு கொண்டு வந்து கொடுக்க முடியாது என்று தெரிவித்தனர். மற்றொரு கண்ணும் மங்களாக உள்ளதால் கைதாங்களாக தான் என்னை கூட்டி செல்ல வேண்டும். எனவே, மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, முன்பு இருந்தது போன்று வீட்டில் கொண்டு வந்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை