கன்டோன்மென்ட் வாரியத்தில் அரசின் முகாம் நடத்த முடிவு
குன்னுார்; குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில், உங்களுடன் ஸ்டாலின் முகாம் உட்பட அரசின் நலத்திட்ட முகாம்களை நடத்த வருவாய் துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.குன்னுார் அருகே வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில், 7 வார்டுகளில், 25 ஆயிரம் பேர் உள்ளனர். இங்கு, 11 ஆயிரம் பேர் வாக்காளர்களாக உள்ளனர். இங்குள்ள மக்கள் சட்டசபை தேர்தலில் ஓட்டளித்து வருகின்றனர்.ஆனால், 'இங்கு மாநில அரசு நிகழ்ச்சிகள் எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை. இங்கு அரசு சார்பில் நடத்தப்படும் நலத்திட்டங்கள், கூட்டங்கள் முகாம்கள் நடத்த வேண்டும்,' என, சமீபத்தில் நடந்த ஜமாபந்தியில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், குன்னுாரில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வருகை தந்த கலெக்டரிடமும், 'உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தும் பட்டியலில் வாரியம் இடம் பெறவில்லை,' என, வாரிய முன்னாள் துணை தலைவர் வினோத் தெரிவித்தார். அப்போது, 'உடனடியாக இங்கும் முகாம் நடத்த வேண்டும்,' என, வருவாய் துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.இதேபோல, வாரியத்தில் நடந்த கூட்டத்திலும் இதற்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.