ஆட்குறைப்பு நடவடிக்கை கைவிட வேண்டும்: அரசு டாக்டர்கள் போராட்டம்
ஊட்டி: அரசு மருத்துவ கல்லுாரிகளில் டாக்டர் பணியிடங்களில் ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும் ஏற்கனவே பணியாற்றி வரும் டாக்டர்கள் பணியிடங்களை குறைத்து, புதிதாக தொடங்கப்படும் மருத்துவமனைகளுக்கு டாக்டர்கள் நியமிக்கப்படுகின்றனர். மேலும், முதுநிலை படிக்க செல்லும் டாக்டர்கள் பணியிடங்களை மீண்டும் நிரப்பப்படுவதில்லை. இதனால், டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த நடைமுறையை கண்டித்து ஊட்டியில், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில், ஊட்டி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன் தர்ணா போராட்டம் நடந்தது. சங்க மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். பொருளாளர் தன்ராஜ், நிர்வாகிகளான டாக்டர்கள் நளினி, நித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் கூறியதாவது, 'தமிழகத்தில் மருத்துவ கல்லுாரிகளிலும் மருத்துவர்கள் குறைவாகவே உள்ளனர். 24 ஆயிரம் மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில், 12,000 மருத்துவர்கள் மட்டுமே தற்போது மருத்துவ கல்லுாரிகளில் பணியாற்றி வருகின்றனர். குறைவான எண்ணிக்கையில் மருத்துவர்களை வைத்து அரசு மருத்துவ கல்லுாரிகள் நடத்தி வரும் நிலையில் மருத்துவர்கள் பணியிடங்களில் ஆட்குறைப்பு செய்வது தவறான செயலாகும். இதனால், மருத்துவர்கள் மட்டுமல்ல, ஆட்குறைப்பு செய்யப்படும் மருத்துவமனைகளில் நோயாளிகளும் அதிகம் பாதிக்கப்படுவர். தமிழக அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, தற்போது மருத்துவ கல்லுாரிகளில் மருத்துவர் பணியிடங்களில் ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும். இனிமேல் புதியதாக மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டால் அதற்குரிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்ட பின்னரே அந்த மருத்துவமனைகள் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.