புதருக்குள் மறைந்து வரும் அரசு மருத்துவமனை; பராமரிப்பில் ஆர்வம் காட்டாத சுகாதார துறை
பந்தலுார்: பந்தலுார் அரசு மருத்துவமனை புதருக்குள் மறைந்து வருவதால், நோயாளிகள் அச்சத்துடன் மருத்துவமனை வந்து செல்லும் நிலை தொடர்கிறது. பந்தலுார் பஜார் மற்றும் நகராட்சி அலுவலகம், நீதிமன்றத்தை ஒட்டி அரசு மருத்துவமனை அமைந்து உள்ளது. தாலுகா தலைமை மருத்துவமனையான, இங்கு போதிய டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததுடன், ககட்டடவசதிகள் இருந்தும், அவசர சிகிச்சை, ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற வசதிகள் இல்லாமல், பெயரளவிற்கு செயல்பட்டு வருகிறது. உள்நோயாளிகளுக்கு உணவு வழங்க, ஒதுக்கீடு இல்லாத நிலையில், டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கி உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கும் நிலை தொடர்கிறது. இந்நிலையில், மருத்துவமனை கட்டடங்களை சுற்றிலும் புதர்கள் சூழ்ந்து துாரத்தில் இருந்து பார்த்தால் பயனில்லாத கட்டடம் போல காட்சி தருகிறது. இந்த பகுதியில் பாம்புகள் அதிகம் உள்ள நிலையில், புதர்கள் சூழ்ந்து காணப்படுவதால், மருத்துவமனை கட்டடத்திற்குள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நோயாளிகள் மட்டும் இன்றி ஊழியர்களும் அச்சத்துடன் பணியாற்றும் சூழல் தொடர்கிறது. மருத்துவமனை உள் நோயாளிகள் பிரிவு கட்டடத்தின் கீழ் பகுதியில், உணவு மற்றும் மருத்துவ கழிவுகள் குப்பை தொட்டியில் கொட்டி அகற்றாமல் உள்ளதால், புழுக்கள் நிறைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, மருத்துவமனை வளாகத்தை சுற்றிலும் முழுமையாக சீரமைத்து தொடர்ந்து பராமரிக்க வேண்டியது அவசியம்.