உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட நிறைவு விழா

அரசு பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட நிறைவு விழா

மஞ்சூர்: கரியமலை கிராமத்தில் நடந்த நாட்டு நலப்பணி திட்ட முகாமின் நிறைவு விழாவில், மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராம்கி தலைமையில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள், 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கரியமலை கிராமத்தில் சமூக பணிகளை மேற்கொண்டனர். கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி வளாகம், சமுதாயக்கூடம், கோவில், குடிநீர் தொட்டிகள் போன்ற இடங்களில் வளர்ந்திருந்த செடி, கொடிகள், முட்புதர்களை வெட்டி அகற்றினர். குடியிருப்புகளை சுற்றிலும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தினர். ஏழு நாட்கள் நடந்த சிறப்பு முகாமில் சமூக பணிகளுடன் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு , போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. முகாமின் நிறைவு விழா கரியமலை சமுதாய கூடத்தில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியை தீபா தலைமை வகித்தார். கரியமலை ஊர் தலைவர் மணிகண்டன், என்.சி.சி., அலுவலர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். கரியமலை கிராமத்தில் தொடர்ந்து, 7 நாட்கள் சமூக பணியாற்றிய மாணவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஊர் பிரமுகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !