வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திராவிட மாடல் என கொக்கரிபவர்களுக்கு இம்மாதிரி அவலங்களை பட்டியலிட்டு செய்திகள் அனுப்பிக்கொண்டே இருக்கவேண்டும்.
பந்தலுார் : பந்தலுார் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாததுடன், டாக்டர் பற்றாக்குறையும் நிலவி வருவதால், நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.பந்தலுார் பகுதி, கூடலுார் தாலுகாவுடன் இணைந்து இருந்த போது வட்டார அரசு மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது. கடந்த, 1998ம் ஆண்டு பந்தலுார் தனி தாலுகாவாக மாறிய பின்னர் தாலுகா அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. வட்டார மருத்துவமனையாக இருந்தபோது இங்கு, 40 படுக்கை வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கு, 80 படுக்கைகளுடன் கூடிய உள்நோயாளிகள் பிரிவுகளுடன் சிறப்பாக செயல்பட்டு வந்தது. குறைக்கப்பட்ட டாக்டர்கள்
இந்நிலையில், தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர், டாக்டர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, அறுவை சிகிச்சை அரங்கம் மூடப்பட்டு, ஆண்டுதோறும் பொதுப்பணித்துறை மூலம் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டடத்தை மட்டும் சீரமைத்து வருகின்றனர்.தற்போது, இந்த மருத்துவமனைக்கு, 5 -டாக்டர்கள் தேவைப்படும் நிலையில், இரண்டு பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால், 'ஒரு டாக்டர் மட்டுமே பகல் நேரங்களில் வெளி மற்றும் உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது; அவ்வப்போது பிரேத பரிசோதனை செய்வது,' என, மன உளைச்சலுடன் பணியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஆறு- செவிலியர்கள் தேவைப்படும் நிலையில், மூன்று பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால், இங்கு வரும் நோயாளிகள் தொடர்ச்சியாக, கூடலுார் மற்றும் ஊட்டி, கேரள மாநிலம் வயநாடு பகுதிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு வருகின்றனர். வயிற்று வலி மற்றும் காய்ச்சல் உள்ள நோயாளிகள் மட்டுமே, உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சை அரங்கு துருப்பிடித்து பாழடைந்த அறையாக மாறி உள்ளது. கட்டில் மற்றும் படுக்கைகள் பயன்படுத்தாமல் வீணாகி வருகிறது. இது குறித்து அரசியல் கட்சிகள்; அதிகாரிகள் கவலைப்படாத நிலையில், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரிசி ஒதுக்காமல் திட்டம் துவக்கம்
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உள் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது. ஆனால். இதுவரை உணவு சமைக்க அரிசி வழங்காத நிலையில், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தினசரி அரிசியை மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கும் நிலை தொடர்கிறது. இந்த கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகளை, ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் செலவு செய்து சீரமைத்த போதும் தரமில்லாத பணியால் அடிக்கடி சேதமாகிறது.உள்ளூர் மக்கள் கூறுகையில்,'பந்தலுாருக்கான ஒரே ஒரு அரசு மருத்துவமனை உள்ளது. அதில், டாக்டர்கள் குறைவு; பராமரிப்பில்லாத அறுவை சிகிச்சை மையங்கள் போன்ற காரணங்களால், கோமா நிலையில் உள்ளது. இதற்கு 'அவசர' சிகிச்சை தேவைப்படுகிறது. எனவே, மாவட்ட உயர் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து, அரசு மருத்துவமனைக்கு, தேவையான டாக்டர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து நோயாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து, புத்துயிர் கொடுக்க வேண்டும். இது குறித்து மாநில முதல்வர்; மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளோம்,' என்றனர்.
திராவிட மாடல் என கொக்கரிபவர்களுக்கு இம்மாதிரி அவலங்களை பட்டியலிட்டு செய்திகள் அனுப்பிக்கொண்டே இருக்கவேண்டும்.