உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குற்றச்சாட்டுகளுடன் முடிந்த கிராம சபை கூட்டம்

குற்றச்சாட்டுகளுடன் முடிந்த கிராம சபை கூட்டம்

பந்தலுார்; பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சி கிராம சபை கூட்டம், வெறும் குற்றச்சாட்டுகளுடன் நிறைவு பெற்றது. நெலாக்கோட்டை ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். தலைவர் டெர்மிளா தலைமை வகித்தார். அதில், 'அம்பலமுலா பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில், அரசு தொகுப்பு வீடு கட்டுவது குறித்து நடவடிக்கை வேண்டும்; மாணவர்கள் அதிகம் நடந்து செல்லும் பகுதியில் உள்ள அபாயகரமான மரங்களை அகற்ற வேண்டும்.மேலும், நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட, அனைத்து இடங்களிலும் யானைகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் காற்று மட்டுமே வருகிறது. இது போன்று மக்களின் வரிப்பணத்தை விரயமாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது. 'இதுகுறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்,'என, ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ரமேஷ் குமார் தெரிவித்தார். 'முதுமலை வனப்பகுதியை ஒட்டி அகழி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராம பகுதியில் உள்ள யானைகளை கண்காணிக்கும் பணியில் வனக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்,' என, உதவி வன பாதுகாவலர் அருள் மொழி வர்மன் தெரிவித்தார். கூட்டத்தில், மக்களின் அடிப்படை வளர்ச்சி பணிகளை நிறைவேற்றுவது குறித்து, விவாதங்கள் ஏதும் நடக்காமல், வெறும் குற்றச்சாட்டுகளுடன் கிராம சபை முடிந்தது. இதனால், மக்கள் அதிருப்தி அடைந்தனர். கூட்டத்தில், வனச்சரகர் ரவி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி