உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆலங்கட்டி மழை பொழிவு; மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள்

ஆலங்கட்டி மழை பொழிவு; மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள்

கோத்தகிரி; கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பெய்த ஆலங்கட்டி மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக, வெயிலான காலநிலை நிலவியது. இதனால், வெப்ப சலனம் அதிகரித்து காணப்பட்டது. தேயிலை உட்பட, மலை காய்கறி தோட்டங்களில் ஈரப்பதம் குறைந்ததால், பயிர்கள் வாட்டம் கண்டன.குடிநீர் ஆதாரங்களில், தண்ணீர் இருப்பு குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், நேற்று பிற்பகல், 3:00 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், 3:30 மணி முதல், கோத்தகிரியில் ஆலங்கட்டி மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேல், நீடித்த இந்த மழையால், நீர் ஆதாரங்கள் நிறைந்து, விவசாய தோட்டங்களில் ஈர தன்மை அதிகரித்தது. இதேபோல, ஊட்டியிலும் ஒரு மணி நேரம் மழை பெய்தது.இதனால், எதிர் வரும் நாட்களில், தேயிலை தோட்டங்களில் அரும்பு துளிர்விட்டு மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் மலை காய்கறி பயிர்களும் செழித்து வளர, இந்த மழை ஏதுவாக அமைந்துள்ளது. இதனால், விவசாயிகள் உட்பட, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி