குடியிருப்பு பகுதியில் அபாய மரங்கள்; உடனடியாக அகற்ற மக்கள் வலியுறுத்தல்
கோத்தகிரி ; கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், அபாய மரங்கள் அகற்றப்படாமல் உள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே, தோட்டக்கலை துறை அலுவலகம், நுகர்வோர் பண்டக சாலை, சர்ச் மற்றும் குடியிருப்புகள் நிறைந்து உள்ளன.வானுயர்ந்த மரங்கள் இப்பகுதியில் நிறைந்துள்ளதால், மழையுடன் காற்று வீசும் போது, மரங்கள் விழுந்து அசம்பாவிதம் நடைபெற வாய்ப்புள்ளது.கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, மழையின் காரணமாக, இரண்டு மரங்கள் விழுந்து, நுகர்வோர் பண்டகசாலை மேற்கூரை சேதமடைந்தது.குறிப்பிட்ட நேரத்தில், ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.அப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு இணங்க, குன்னுார் ஆர்.டி.ஓ., சங்கீதா, வனத்துறை அலுவலர்களுடன் அப்பகுதியை ஆய்வு செய்து, இங்குள்ள, எட்டு அபாய மரங்களை அகற்ற அறிவுறுத்தினார்.அதன்படி, கடந்த இரு நாட்களுக்கு முன்பு, இப்பகுதியில், மூன்று மரங்கள் மட்டுமே அகற்றப்பட்டன. மீதமுள்ள மரங்கள் அப்படியே விடப்பட்டுள்ளன. மேலும், மாவட்டத்தில், சாலை மற்றும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் அபாயகரமான மரங்கள் கணக்கு எடுக்கப்பட்டு, தொடர்ந்து அகற்றப்பட்டு வருகிறது.அதேபோல, கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே, குடியிருப்புகள் நிறைந்துள்ள பகுதியில் உள்ள அபாய மரங்களை, மழை தீவிரம் அடைவதற்கு முன்பு, அகற்ற நடவடிக்கை எடுப்பது அவசியம்.