மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி
பந்தலுார்; பந்தலுார் 'டியுஸ்' மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கான சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கூடலுார் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், 'ஆல் தி சில்ரன்' அமைப்பு, பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் சுதந்திரநாத் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம், ஒருங்கிணைப்பாளர் அஜித், முன்னிலை வகித்தனர். அதில், மேங்கோரேஞ்சு மருத்துவமனை டாக்டர் ஷர்மிளா பேசுகையில், ''பெண்கள் சுகாதாரம் என்பது உடல் ஆரோக்கியம், மன நலம், சுத்தமாக இருத்தல் ஆகியவையாகும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வது உடல் உறுப்புகளை மேம்படுத்தும். இதனால், நோய் பாதிப்பு இல்லாமல் உடல் நலத்துடன் இருக்க முடியும். அதுபோல, நல்ல உறக்கம், விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவை உடல் மற்றும் மனநலனை பாதுகாக்கும். எனவே, மாணவிகள் தங்களின் உடல் நலனை பாதுகாக்க அக்கறை கொள்ள வேண்டும். பருவ காலத்தில் ஏற்படும் உடல் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு மனதில் ஏற்படும் மாற்றங்களை நல்ல சிந்தனைகளுக்கு பயன்படுத்த வேண்டும்,'' என்றார். நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.