இடியுடன் கனமழை : மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
குன்னுார்; குன்னுாரில் நேற்று இடி மின்னலுடன் கனமழை பெய்தது.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், நேற்று மாலை, 3:30 மணியளவில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. குன்னுார், வெலிங்டன், அருவங்காடு, எடப்பள்ளி உட்பட சுற்றுப்புற பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.மாலை, 4:30 மணிக்கு பர்லியார் அருகே மரம் விழுந்ததில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் வந்து மரத்தை வெட்டி அகற்றினர். போலீசார் வந்து போக்குவரத்து பாதிப்பை சீர்படுத்தினர்.மேலும், லேம்ஸ்ராக் அருகே வித்யாசாகர் என்பவரின் பங்களா பராமரிப்பாளர் வீட்டின் மீது மரம் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. மரத்தை அகற்றும் பணிகள் நடந்தது. வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்றதால் யாருக்கும் பாதிப்பு இல்லை. வெயிலுக்கு பிறகு பெய்த மழையால் 'குளு குளு' காலநிலை நிலவியது. வருவாய் அதிகாரிகள் கூறுகையில்,' இரவில் கனமழை பெய்வதால் பாதிப்பு ஏற்பட்டால், 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்,' என்றனர்.