உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பேரிடர் விபத்துகளில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? தீயணைப்பு துறையினரின் தத்ரூப ஒத்திகை நிகழ்ச்சி

பேரிடர் விபத்துகளில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? தீயணைப்பு துறையினரின் தத்ரூப ஒத்திகை நிகழ்ச்சி

ஊட்டி; பேரிடர் விபத்துகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்து, தீயணைப்பு துறையினர் தத்துரூபமாக செயல் விளக்கம் அளித்தனர். ஊட்டி அருகே உள்ள பைன் பாரஸ்ட் சூழல் சுற்றுலா மையத்தில் தீயணைப்புத் துறையினர் சார்பில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. 'பருவ மழை காலங்களில் தண்ணீரில் சிக்குபவர்களை எவ்வாறு மீட்பது,' என, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஒத்திகை காண்பிக்கப்பட்டது. அதில், தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் குதித்து தத்தளித்த போது, அவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து, தத்ரூபமாக பல வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர். மேலும், பருவமழை காலங்களில் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தால் அதில் நாம் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்ற வழிமுறையை செய்து காண்பித்தனர். மேலும், 5 மற்றும் 20 லிட்டர் கேன்கள் கட்டி நீச்சல், டயர் ட்யூப் பயன்படுத்தி தண்ணீரில் மூழ்காமல் தப்பி கொள்வது குறித்து விளக்கம் அளித்தனர். அதேபோல், பேரிடர்களிலும் வாகன விபத்துகளில் சிக்கிக் கொள்பவர்களை அதிநவீன உபகரணங்களை கொண்டு எப்படி மீட்பது எனவும் செய்து காண்பித்தனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கடாசலம் கூறுகையில், ''பேரிடர், பருவ மழை காலங்களிலும் சிக்கும் போது பொதுமக்கள் அச்சமடைய கூடாது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், அவசர நேரங்களில் இதுபோன்று செயல்களில் ஈடுபட்டு பலரை காப்பாற்ற முன் வரவேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி