| ADDED : ஜன 30, 2024 11:09 PM
ஊட்டி:ஊட்டியில் மனிதநேய வார இறுதி விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. மனிதநேய வார விழா, 24ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடந்தது. ஒரு வாரம் நடந்த விழாவில், மாவட்டம் முழுவதும், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இறுதி நாளான நேற்று, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஊட்டி மற்றும் பண்பாட்டு மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் அருணா தலைமை வகித்து பேசுகையில், ''மனிதநேயம் மிக்கவர்கள் அதிகம் பேர் உள்ளனர். ஜாதி, மதம் வேறுபாடின்றி மனிதனை மனிதனாக நேசிக்க வேண்டும். தீண்டாமையை ஒழிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும், குடிநீரில் மலம் கலக்கும் நிகழ்வு நடக்கிறது. இதனை ஒழிக்க சமுதாயத்தில் தனிமனித ஒழுக்கம் அவசியம். பள்ளி பருவத்தில் இருந்தே தீண்டாமையை ஒழித்து மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் வாயிலாக சொல்லி தரப்படுகிறது. இந்த போட்டிகளில் மாணவர்கள் மாநில அளவில் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது,''என்றார்.தொடர்ந்து, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஜி.டி.ஆர்., பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மனிதநேய கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது. இதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொ) தமிழ்மணி, ஆர்.டி.ஓ., மகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.