கொத்தடிமைகள் கண்டறியப்பட்டால் உரிமையாளருக்கு சிறை தண்டனை; தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை
ஊட்டி; 'கொத்தடிமை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டால் பணிக்கு அமர்த்திய உரிமையாளருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்,' என, தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரித்துள்ளார்.கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் இம்மாதம், 9ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதன்படி, தொழிலாளர் ஆணையர் உத்தரவின் படி, கலெக்டர் லட்சுமி பவ்யா , குன்னுார் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தாமரை மணாளன் தலைமையில், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. கொத்தடிமை முறை ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஊட்டி, குன்னுார் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில், கொத்தடிமை தொழிலாளர் முறை குறித்து விளக்குதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.குன்னுார் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தாமரை மணாளன் கூறியதாவது,''கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டத்தின் கீழ், கொத்தடிமை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டால் பணிக்கு அமர்த்திய உரிமையாளருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். கொத்தடிமை தொழிலாளர் பற்றிய புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண்: 18004252650 மற்றும் அவசர உதவிக்கு மாவட்ட கலெக்டர், சப் - கலெக்டர், ஆர்.டி.ஓ., தொழிலாளர் உதவி ஆணையர், மாவட்ட மற்றும் கோட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கள், போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட அலுவலகங்களை அணுகலாம்,'' என்றார்.