குன்னுாரில் காட்டெருமை உயிரிழப்பு அதிகரிப்பு; வனத்துறை விசாரணை அவசியம்
குன்னுார்; குன்னுார் வண்ணாரப்பேட்டை பகுதியில் கடந்த இரு வாரங்களில் மூன்று காட்டெருமைகள் உயிரிழந்துள்ளன.குன்னுார் வண்ணாரப்பேட்டை பகுதியில், 10 க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் உலா வருகின்றன.இந்நிலையில், கடந்த வாரத்தில் வயது முதிர்ந்த நிலையில், நடமாட முடியாமல் சிரமப்பட்ட நிலையில், வனத்துறையினர் கண்காணித்து, தண்ணீர் உணவு கொடுத்து வந்தனர். எனினும். உயிரிழந்தது. இதேபோல, மற்றொரு காட்டெருமையும் இதே பகுதியில், உயிரிழந்தது. கால்நடை டாக்டரை வரவழைத்து பிரேத பரிசோதனை செய்து, அதே இடங்களில் வனத்துறையினர் புதைத்தனர்.இந்நிலையில், வண்ணாரப்பேட்டை சாலை, மாணவியர் விடுதி செல்லும் வழியில், 7 வயதுடைய பெண் காட்டெருமை இறந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இதனால் அப்பகுதி சேர்ந்தவர்கள் செடிகளை கொண்டு மூடி வைத்தனர்.தகவலின் பேரில், வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு, கால்நடை டாக்டரை வரவழைத்து பரிசோதனை செய்து புதைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேபோல, ஆப்பிள் பீ, வண்டிச்சோலை பகுதிகளில் சமீபத்தில் இரு காட்டெருமைகள் இறந்தன.வனத்துறையினர் கூறுகையில்,'வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், உணவு உட்கொள்ள முடியாத, வயது முதிர்ந்த காட்டெருமைகள் தான் இறந்துள்ளன. பிரதே பரிசோதனை விபரங்கள் வந்த பிறகு மற்ற விபரங்கள் தெரியவரும்,' என்றனர்.வன உயிரின ஆர்வலர்கள் கூறுகையில், 'இப்பகுதியில் உலா வரும் காட்டெருமைகள் அடிக்கடி இறந்து வருவது குறித்து வனத்துறை விரிவான விசாரணை நடத்த வேண்டும்.இறப்புக்கு வேறு காரணங்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் நீலகிரி காட்டெருமைகள் அழிவின் பட்டியலில் சேரும் ஆபத்து உள்ளது,' என்றனர்.