மின் கம்பங்களில் அதிகரிக்கும் விளம்பர தட்டிகள்: தடுப்பது அவசியம்
கூடலுார்; 'கூடலுாரில் அனுமதி இன்றி மின் கம்பங்களில் அதிகரிக்கும் விளம்பர தட்டிகள் தடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி பொது இடங்களில் விளம்பர பேனர்கள், விளம்பர தட்டிகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில், இத்தடை ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், தற்போது கூடலுார் உள்ளிட்ட பல பகுதியில் தடையை மீறி, பொது இடங்கள், மின்கம்பங்கள், மரங்களில் விளம்பர தட்டிகள் வைப்பது அதிகரித்துள்ளது. அவ்வாறு வைக்கப்படும் விளம்பர தட்டிகள் நிகழ்ச்சி முடிந்த பின்பும் அகற்றப்படுவதில்லை.மின் கம்பங்களில் வைக்கப்படும் விளம்பர பலகைகள் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புவதுடன், மின் ஊழியர்களுக்கும் சிரமங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இதனை அரசு துறையில் தடுக்க நடவடிக்கை இல்லாததால், இது போன்ற விளம்பர தட்டிகள் வைப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'பொது இடங்கள் அனுமதி இன்றி டிஜிட்டல் பேனர்கள், விளம்பர தட்டிகள் வைக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று மரங்கள், மின் கம்பங்களில் விளம்பர தட்டிகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மலை மாவட்டமான நீலகிரி சாலையில் குறுகியதாகவும், வளைவுகள் நிறைந்தும் காணப்படுகிறது. இச்சாலை ஓரங்களில் உள்ள மின்கம்பங்களில் விளம்பர தட்டிகள் வைப்பதால் வாகன ஓட்டுனர்கள் சிரமங்களை சந்திக்கும் சூழல் உள்ளது. எனவே, அனுமதி இன்றி வைக்கப்பட்ட விளம்பர தட்டிகள் அகற்றுவதுடன், விளம்பர தட்டிகள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.