கோவிலுக்குள் புகுந்த கரடியால் அச்சம்
கோத்தகிரி : கோத்தகிரி அருகே கோவில் கதவை இரண்டாம் முறையாக கரடி உடைத்ததால், விழா நடத்துவதில் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அரவேனு அருகே அமைந்துள்ள கல்லாடா கிராமத்தில், 15 நாட்களுக்கு மேலாக, கரடிகள் உலா வருவது தொடர்கிறது.கிராமத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள முருகன் கோவில் கதவுகளை, இரண்டு முறை உடைத்த கரடி கோவிலுக்குள் புகுந்து, எண்ணெய் உள்ளிட்ட பூஜை பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. மக்களின் கோரிக்கைக்கு இணங்க, கரடி நடமாட்டத்தை கண்காணிக்க, வனத்துறை சார்பில், 'சி.சி.டி.வி., கேமரா' பொருத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை மீண்டும் கோவில் கதவை கரடி உடைத்துள்ளது.இக்கோவிலில், தைப்பூச திருவிழா நடத்த கிராம மக்கள் ஆயத்தமான நிலையில், கரடி நடமாட்டத்தால், அச்சத்திற்கு இடையே விழாவை நடத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால், விழா நாட்களில், பாதுகாப்பு அளிப்பதுடன், கரடியை கூண்டு வைத்து பிடிப்பது அவசியம்.கிராம மக்கள் கூறுகையில், 'கரடி நடமாட்டத்தால், ஆண்டுக்கு ஒரு முறை வரும் விழாவை கூட அச்சத்திற்கு இடையே நடத்த வேண்டிய நிலை உள்ளது. வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,' என்றனர்.